இடதுசாரிகளுடன் மீண்டும் இணைவோம்-கருணாநிதி

முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் என்னைக் கவர்ந்தவர்களில் ஒருவர் ஹர் கிஷன்சிங் சுர்ஜித். மூப்பின் காரணமாக நலிவுற்று வீட்டிலேயே இருந்த அவரை நான் டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் வீடுதேடிச் சென்று நலம் விசாரிக்கத் தவறியதில்லை.
அரசியல் சமுதாயக் கருத்துக்களை அவரிடம் பகிர்ந்து கொள்வதிலும் அவரது அபிப்பிராயங்களுக்கு தனித்தகுதி அளித்து மேற்கொள்வதிலும் எனக்கு ஓர் உற்சாகம் பிறப்பதும் உத்வேகம் எழுவதும் இயற்கையாக இடம் பெற்றவையாகும். அவரது வரிசையில் டெல்லிப் பட்டணத்தில் நான் சந்தித்துப் பழகிய வாலிப வயதினரான மற்றொரு கம்யூனிஸ்ட் தோழர் சீத்தாராம் யெச்சூரி.
டெல்லியில் அரசுகள் புதிது புதிதாக அமையும்போதெல்லாம், நானும் யெச்சூரியும், தம்பி மாறனும், அய்யா மூப்பனாரும் இணைந்து ஆலோசித்து முடிவுகளை மேற்கொண்ட நிகழ்வுகள் எல்லாம் உண்டு. அரசியல் புயல் தாறுமாறாக வீசிக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் வயோதி, மற்றும் வாலிப கம்யூனிஸ்டு தலைவர்கள் பற்றிய சிந்தனை உதயமாகிறது ஏன் என்று; கேள்வி எழுப்பலாம்.
இந்த இருவரில் மூத்தவரான ஹர்கிஷன்சிங் சுர்ஜித் இப்போது உயிரோடு இருந்திருப்பாரேயானால் அவரின் அனுபவ அறிவின் அழுத்தம் நிலைமையை சீர்படுத்த பயன்பட்டிருக்கும் என்ற கருத்து எனக்கு உண்டு.
நண்பர் சீத்தாராம் யெச்சூரியை பொறுத்தவரையில் சிலவற்றை இயற்கைக்கே விட்டுவிட்டு; மனத்தில் உள்ள லட்சியத்தை அது தானாகவே வெற்றி அடையட்டும் என்று காத்திருப்பவர் என்பதை நான் நன்குணர்வேன்.
அதற்காக தான் கொண்ட கொள்கை, குறிக்கோள் நிறைவேறிடத் தொண்டு புரியாமல் இருந்துவிடுபவரும் அல்ல.
அதற்கோர் உதாரணம் கூறுகிறேன், நான் சொல்வது சரியா, தவறா என்பதை ஆய்ந்து அறிந்துகொள்ள அது உதவும். இந்திய அரசியல் அரங்கில் இன்றைய ஆளுங்கட்சியான காங்கிரசுக்கும், இடதுசாரித் தலைவர்களுக்கும் அமெரிக்கா உடனான அணு ஒப்பந்தம் குறித்த பிரச்சினையில் மனவேறுபாடு ஏற்பட்டு நடுநிலையில் நானிருந்து அரும்பாடுபட்டும் இயலாமல் அணிமாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
அந்த தாக்கம் தமிழகம் வரையில் வேரோடிவிட்டதால் நமது இயக்கமும், கழக ஆட்சியும் இடதுசாரிகளின் தாக்குதலுக்குள்ளாகி, தோழமைக்கும் ஆழக் குழி தோண்டப்பட்டாகிவிட்டது.
ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்டுகளை பொறுத்தவரையில், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்ட தேர்தல் உடன்பாடுகள், தேர்தல் கூட்டணிகள் என்று அமைந்த நிலை மாறி இன்று அகில இந்திய அளவில் ஒரே கூட்டணிதான் என்று திட்டவட்டமாக முடிவெடுத்து விட்டதாக சொல்லி,
மதவாதிகளுக்கு எமது கூட்டணியில் இடமில்லை என்று கூறிக்கொண்டே மத வெறியாளர்களுக்காக கரசேவைக்கு அயோத்திக்கு ஆதரவளித்த ஜெயலலிதாவை அணித்தலைவியாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற நிலையல்லவா இன்று!.
சேது சமுத்திர திட்டம் அண்ணாவின் கனவு, அதை அதிமுக அரசு நிறைவேற்றியே தீரும், தமிழகத்தை வாணிப ரீதியிலும், பொருளாதார நிலையிலும் வளப்படுத்துவதோடு, இலங்கையை சுற்றிக்கொண்டு போக வேண்டிய கடல் பயணத்தை பலகல் தூரம் குறைக்கக்கூடிய, அந்த அருமையான திட்டத்தை நிறைவேற்றாமல் விடமாட்டேன் என்று அதிமுக தேர்தல் அறிக்கைகளிலும் தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும் சூளுரைத்தவர் அதிமுக தலைவி ஜெயலலிதா.
ஆனால் இப்பொழுது அவரே; ராமர் கட்டிய பாலத்தை இடிப்பதை எதிர்க்கிறேன் என்று வழக்காடுகிறார் சுப்ரீம் கோர்ட்டு வரையில். ஆம்; இல்லாத பாலத்துக்காக இப்படி ஒரு போர் முழக்கம்! இடி முழக்கமாக!.
இணையற்ற எத்தனையோ பொறியாளர்கள், விஞ்ஞானிகள், மேதைகள், எடுத்துச் சொல்லியும்கூட சேதுசமுத்திர திட்டத்துக்கு எதிராக இன்றைக்கு ராமனையும், ராமாயணத்தையும் காட்டுகிற மதவாதத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார் ஜெயலலிதா.
இந்த நேரத்தில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளின் நாளேடான தீக்கதிர்' எனும், நான் தினந்தோறும் படிக்கிற ஏடுகளில் ஒன்றான அந்த ஏட்டில்; சீத்தாராம் யெச்சூரி அழைப்பு'' என்ற தலைப்பில் 22ம் தேதி வெளிவந்துள்ள கருத்தோவியம்; இது சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கங்களின் 11-வது மாநில மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய தோழர் யெச்சூரி வெளியிட்ட கருத்துக்கள் பலவற்றில், இதோ சிலவற்றை மட்டும் தொகுத்து வழங்கியுள்ளேன்.
அது வருமாறு:-
''மூட நம்பிக்கைகள், மதவெறி போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு ஊடகமாக கலாச்சாரம் திகழ வேண்டும். இலக்கிய நயத்தை ரசித்துப் போற்றுகிற அதே நேரத்தில், புராணக் கற்பனையையும் வரலாற்று உண்மையையும் பாகுபடுத்தி பார்க்க வேண்டும். இன்றைய இலங்கை, இந்தியா உள்பட ஒரே நிலப்பகுதியாக இருந்த காலகட்டம் உண்டு. கடல் மட்டம் உயர்ந்ததை தொடர்ந்துதான் இலங்கை தனித் தீவாகியது. அதற்கு இடையே ஒரு பாலம் இருந்ததாக சொல்வது இனிய புராண கற்பனை. அதையே வரலாற்று உண்மையாகக் கூறி சேது சமுத்திரத் திட்டம் போன்றவற்றை முடக்க முயல்வார்களானால் அதை எதிர்த்து போராட வேண்டும்.
தசாவதாரம் புராணத்தில் உள்ள விலங்கு வடிவங்களை அறிவியல் உண்மைகளோடு இணைத்து நாம் பேசினால் மதவாதிகள் அதை விமர்சிக்கிறார்கள். ஆனால் நாம் கற்பனை எது, அறிவியல் எது என்று பகுத்தறிவோடு இதையும் பார்க்க முடியும்.
அதேபோல் ராமாயணம் என்பது ஒரே கதையல்ல. ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்தந்தப் பகுதியின் சமூக- அரசியல்- பொருளாதார குழல்களுக்கு ஏற்ப மாறுபட்ட ராமாயண கதைகள் உருவாகியுள்ளன.
அதில் ராமன் போன்றவர்களை மனித உருவிலும், வாலி போன்றவர்களை விலங்கு உருவத்திலும் படைத்ததிலும் கூட, ஆரியர்- திராவிடர் போராட்டம் இருக்கிறது. ஆரியர் மேன்மையை நிலைநாட்ட திராவிடர்களை தாழ்வானவர்களாக சித்தரிக்க இது கையாளப்பட்டது.
இன்று ராமாயணத்தை ஒரே கதையாக்குகிற முயற்சி நடக்கிறது. ஒற்றை கலாச்சார ஆதிக்கத்திற்காகவே இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது. புராணத்தை வரலாற்றோடும்- இறையியலை தத்துவத்தோடும் கலப்பது என்பது மதவெறி சக்திகளின் வேலை. ஆளும் வர்க்கங்களின் சுரண்டல் வேட்டைக்கு இது சாதகமாக இருக்கிறது. இதன் செல்வாக்கை தடுத்து நிறுத்த, மக்களின் உண்மையான பிரச்சினைகளை மையப்படுத்தும் படைப்புகள் நிறைய வரவேண்டும்''.
யெச்சூரி எழுப்பியுள்ள இந்த மூலமுழக்கத்தில் நமது இயக்கத்தின் ஒலியும் கலந்து இணை முழக்கமாக இருக்கிறதல்லவா?.
யெச்சூரி அணி சேர்ந்துள்ள ஜெயா கட்சியில் இது இணை முழக்கமாகக்கூட வேண்டாம்; துணை முழக்கமாகவாவது அமைந்துள்ளதா?.
அமைந்திருந்தால் அண்ணா கண்ட கனவான சேதுசமுத்திர திட்டத்திற்கு எதிரான வரிசையில் நின்று; நீதிமன்ற தடை பெறுவதற்கும்கூட நெடிய பயணம் நடத்துவார்களா?.
யெச்சூரியின் பேச்சை படிக்கும் நமக்கு என்ன தோன்றுகிறது?. இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் நாமும் இடதுசாரிகளும் இணையும் நிலைமையினை உள்ளடக்கிய லட்சியத்தை காண முடிகிறது.
ஆனால் இன்று அணி சேர்ந்து ஆர்ப்பரிப்போர் எதிர்காலத்தில் யெச்சூரி' கருத்துக்கு எதிர்க்கருத்து கூறும் அணியில் அன்றோ இருக்கப் போகின்றார்!.
இவ்வாறு தனது கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications