அமர்நாத் நில விவகாரத்தால் பலனடைந்த பாஜக!
ஜம்மு: அமர்நாத் நில விவகாரத்தால் பாஜகவுக்கு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெரிய அளவிலான வெற்றி கிடைத்துள்ளது. கடந்த சட்டசபையில் ஒரே ஒரு எல்.எல்.ஏவுடன் இருந்த பாஜக இந்த முறை 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களைப் பெறுகிறது.
கடந்த 2002ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி மொத்தம் 27 இடங்களைக் கைப்பற்றியது. இதில் ஜம்முவிலிருந்து 9 தொகுதிகளும், காஷ்மீரிலிருந்து 18 தொகுதிகளும் அதற்குக் கிடைத்தது.
காங்கிரஸ் கட்சிக்கு ஜம்முவில் 15 இடங்களும், காஷ்மீரில் ஐந்து தொகுதிகளும் கிடைத்தன.
மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு காஷ்மீரில் 16 தொகுதிகள் கிடைத்தன. ஆனால் ஜம்முவில் அதற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
மற்ற கட்சிகளுக்கு ஜம்முவில் 12 சீட்களும், காஷ்மீரில் 7 சீட்களும் கிடைத்தன.ய
பாஜகவுக்கு காஷ்மீரில் ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. ஜம்முவில் ஒரு இடத்தில் மட்டும் வென்றிருந்தது. ஆனால் இந்த முறை மொத்தமாக 11 இடங்களில் வெல்லும் நிலையில் உள்ளது பாஜக.
பாஜகவின் இந்த திடீர் எழுச்சிக்கு முக்கிய காரணம், அமர்நாத் நிலத்தை மாற்றுவதில் எழுந்த சர்ச்சைதான். ஜம்மு பிராந்தியத்தையே இந்த விவகாரத்தை மையப்படுத்தி போராட்ட களமாக மாற்றியிருந்தது பாஜக.
அமர்நாத் நில விவகாரத்தை அது துரிதமாக கையில் எடுத்துக் கொண்டு பிரச்சினையாக்கியதால் பாஜகவுக்கு சாதகமாக ஜம்மு வாக்கு வங்கி திரும்பி விட்டது.
இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது காங்கிரஸ்தான். வழக்கமாக ஜம்மு வாக்காளர்கள் காங்கிரஸுக்கே வாக்களிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை காங்கிரஸ் வாக்கு வங்கியை காலி செய்து விட்டது பாஜக.
சமீபத்தில் நடந்த மற்ற சட்டசபைத் தேர்தல்களில் டெல்லியைப் பிடிக்கும் முயற்சியில் பாஜக தோல்வி அடைந்தது. பெரிய அடியாக ராஜஸ்தானில் ஆட்சியை இழந்தது. இந்த நிலையில் ஜம்முவில் கிடைத்துள்ள இந்த பெரிய வெற்றி, பாஜக தரப்பை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications