அடேடே, ஜெயலலிதாவா கண்ணீர் விடுவது?-கருணாநிதி
சென்னை: விரைவுப் போக்குவரத்து பஸ்களை, வேறு போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கும் திட்டமே இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: விரைவுப் போக்குவரத்து கழகப் பேருந்துகள், பிற போக்குவரத்து கழகங்களுக்கு அளிக்கப்படுவதாகவும், 'இது தனியார்களை ஊக்கப்படுத்தும் முயற்சி' என்றும் தொழிலாளர்களை பழிவாங்கக் கூடாது என்றும் ஜெயலலிதா கூறியுள்ளாரே?
பதில்: அடேடே, ஜெயலலிதாவா தொழிலாளர்களுக்காக கண்ணீர் விடுகிறார்.? தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள் பெற வேண்டிய போனசை மறுத்தவர்- அலுவலர்களும், தொழிலாளர்களும் கோரிக்கை வைத்தபோதெல்லாம் அவர்களைச் சிறையில் பூட்டி, அரசுக்கு வருகிற வருமானம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கே 96 சதவீதம் போகிறது என்று பேசியவர்- இன்று தொழிலாளர்களுக்காக வடிக்கின்ற கண்ணீருக்குப் பெயர்தான்; அசல் நீலிக்கண்ணீர் என்பதாகும்.
பிற போக்குவரத்துக் கழகத்துக்கு விரைவுப் பேருந்துகளை அளிப்பது என்ற பிரச்சனையே எழவில்லை, இவர் ஏன் தலையைப் பிய்த்துக்கொண்டு இப்படி தாண்டவமாடுகிறார்?
கேள்வி: தமிழகத்தில் சுனாமி பேரலைகளின் சீற்றத்தால் பாதிக்கக்கப்பட்டோருக்கான மறுவாழ்வுப் பணிகளை பற்றி...?
பதில்: சுனாமி பேரலை ஏற்பட்ட 26.12.2004ல் இருந்து 12.5.2006 வரை அதிமுக ஆட்சியில், பாதிக்கப்பட்டோருக்கென மேற்கொள்ளப்பட்ட 8,406 வீடுகளின் கட்டிடப்பணிகள் முடிவடையாத நிலையில் இருந்ததால்; 13.5.2006 அன்று பொறுப்பேற்ற கழக ஆட்சி, சுனாமி பாதித்த பகுதிகளின் மாவட்ட ஆட்சியர் மாநாட்டை கூட்டி, ஆய்வு நடத்தி, அதன் விளைவாக, அவற்றைக்கட்டி முடித்தது. 30.11.2008 வரை மேலும் 29,567 வீடுகளைக்கட்டி பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது.
சுனாமி பாதித்த பகுதிகளில் வீடுகள் கட்ட நடைமுறையில் உள்ள விதிகள் தடையாக இருந்ததால், விதிகள் தளர்த்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டன.
ராஜீவ் காந்தி மறுவாழ்வு தொகுப்பு திட்டத்தின் கீழ் சுனாமி பாதித்த மாவட்டங்களில் பாலங்கள் கட்டுவதற்கும், சாலைகள் அமைப்பதற்கும் ரூ. 362.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு; கடந்த 2 ஆண்டுகளில் 19 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 1,387 கி.மீ சாலை மேம்பாட்டு பணிகள் முடிவடைந்துள்ளன.
சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் 4,778 ஹெக்டேர் நிலப்பரப்பில் கடலோர காடுகளும், 2,162 ஹெக்டேர் நிலப்பரப்பில் மாங்குரோவ் காடுகளும் உலக வங்கி உதவியுடன் ரூ. 29.9 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டன.
13 கடலோர மாவட்டங்களில் உள்ள 591 மீனவக் குடியிருப்புகளில் ரூ. 152 கோடி செலவில் 42,000 மீனவர்களுக்கு எந்திரப் படகுகள், கட்டுமரங்கள், வள்ளங்கள், வலைகள் வழங்கப்பட்டுள்ளன.
ரூ. 110 கோடி செலவில் உயிர்காக்கும் ரப்பர் ஆடைகள், பேட்டரி பொருத்திய கை விளக்குகள், குளிரூட்டும் ஐஸ்பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
5,635 மீனவர்கள் மீனவக் கூட்டுறவு சங்கங்களில் வாங்கியிருந்த ரூ. 19.56 கோடி கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
35,732 ஊனமுற்றவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ. 10,000 வீதம் ரூ. 35.73 கோடி செலவில் பொருளாதார மேம்பாட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சுனாமியில் தாய் அல்லது தந்தை இழந்த 1,713 குழந்தைகளுக்கு தலா ரூ. 51,000 வீதம், மொத்தம் ரூ. 8.74 கோடி வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டு, அதிலிருந்து மாதந்தோறும் கிடைக்கும் வட்டித்தொகை மூலம் அவர்களது கல்விச் செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் பள்ளிபடிப்பு தடைபடாத வகையில் மாதந்தோறும் ரூ. 300 நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கேள்வி: அண்மையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் தமிழகத்திற்கு ரூ. 3,034 கோடி செலவிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதே?
பதில்: ஆம்! ஒரே கூட்டத்தில் ரூ. 3,034 கோடி ரூபாய்ச் செலவிலான திட்டங்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ. 1,530 கோடி செலவில் சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை பறக்கும் சாலை அமைக்கும் திட்டம்;
ரூ. 922 கோடி செலவில் சென்னையில் இருந்து திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் 124 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச் சாலையாக மாற்றும் திட்டம்;
ரூ. 582 கோடி செலவில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 50 கி.மீ நீள சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் என 3 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கேள்வி: துப்புரவு பணியாளர்கள், தோல் தொழில் செய்வோர் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் குழந்தைகள் குலத் தொழிலில் ஈடுபடுவதைத் தடுக்கவும், அவர்கள் கல்வி கற்க வசதியாகவும், கல்வி உதவித் தொகைகள் வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதே?
பதில்: மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. குறிப்பாக துப்புரவு பணியாளர்கள், தோல் தொழில் செய்வோர் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்வது மிகவும் அடிப்படையானதும், அவசியமானதும் ஆகும்.
துப்புரவு தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு 10ம் வகுப்பு வரை படிப்பிற்கான உதவித்தொகை திட்டம் ஒன்று கழக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் துப்புரவு தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கு அவர்களது சாதி, மதம் மற்றும் வருமான வரம்பினை கணக்கில் கொள்ளாமல் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், உயர் கல்வி சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் இளங்கலை பட்டப்படிப்பிற்காக ஆண்டொன்றுக்கு ரூ.6,500ம், முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தொழில் கல்வி படிப்பிற்காக ஆண்டொன்றுக்கு ரூ.7,000மும் வழங்கப்படுகிறது.
மருத்துவப் படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளை பொறுத்தவரை ஆண்டொன்றுக்கு ரூ. 7,000த்தில் 75 சதவீத தொகை மானியமாகவும், 25 சதவீத தொகை கடனாகவும் வழங்கப்படுகிறது.
துப்புரவு பணி, தோல்தொழில் செய்யும் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய பங்கு கிடைத்திடும் வகையில் கழக அரசு அவர்களுக்கு 3 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கச் சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications