தண்டனை உறுதி-போலீசாருக்கு ஜெ எச்சரிக்கை+ மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: அதிமுக எம்எல்ஏ சாமி மற்றும் அதிமுகவினரை மதுரை மாவட்ட எஸ்பி எம்.மனோகர் தாக்கியதில் அவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், திமுகவினரின் செயல்களுக்கு துணையாக இருந்துவரும் காவல் துறை அதிகாரிகள் அதற்கான தண்டனையை அனுபவிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றும் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மிசா பாண்டியன், அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபி உள்ளிட்டோர் தலைமையில் ரெளடி கும்பல்கள் திருமங்கலம் தொகுதியில் தங்கியிருந்து, அதிமுகவை சேர்ந்த முன்னணி நிர்வாகிகளையும், உடன்பிறப்புகளையும், தோழமைக் கட்சிகளின் முன்னணி தலைவர்களையும், தொண்டர்களையும் தாக்கிக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், பொள்ளாச்சி வ.ஜெயராமன் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன், தேனி மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன், ஆர்.சாமி உள்பட 52 பேர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு போட்டுள்ளதாகவும்;

ஆர்.சாமி மற்றும் அவருடன் இருந்த கழக உடன்பிறப்புகளை மதுரை மாவட்ட எஸ்பி எம்.மனோகர் தாக்கியதாகவும், இதன் காரணமாக அவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.

திமுகவினரின் மக்கள் விரோதச் செயல்களுக்கு துணையாக இருந்து வரும் காவல் துறை அதிகாரிகள் அதற்கான தண்டனையை அனுபவிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை அவர்களுக்கு எச்சரிக்கையாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.

காவல் துறையின் கட்டுப்பாட்டில் திருமங்கலம் தொகுதி தற்போது இல்லை. வன்முறையாளர்களின் கட்டுப்பாட்டில் தான் திருமங்கலம் தொகுதி இருக்கிறது. வன்முறையாளர்களுக்கு கட்டுப்பட்டு, அவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் தலையாட்டி பொம்மைகளாக காவல் துறையினர் செயல்படுகின்றனர். பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலை தற்போது திருமங்கலம் தொகுதியில் நிலவுகிறது.

காஷ்மீர் மாநிலத்தை விட மிக மோசமான சூழ்நிலை தற்போது திருமங்கலம் தொகுதியில் நிலவுகிறது.

ஜனநாயகரீதியில் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டிய கடமை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் தேர்தல் ஆணையத்திற்கு பிரத்யேக அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மதுரை மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் எம்.மனோகர், காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஷாஜகான் ஆகியோரை அவரவர் வகித்து வரும் பதவிகளில் இருந்து நீக்க இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமங்கலம் தொகுதியை துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் நேரடிக் கட்டுப்பாட்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

ரத்தக் கறையுடன் அதிமுகவினர் புகார்:

இதற்கிடையே முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.பி. தங்க தமிழ்செல்வன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயராமன், மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. சாமி மற்றும் அதிமுகவினரின் வாகனங்களை போலீசார் சோதனை செய்ததால் ஏற்பட்ட கலாட்டாவில் போலீஸ் வாகனங்களை உடைத்து சேதப்படுத்திய அதிமுகவினர் மீது
கொலை முயற்சி, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல், கலவரத்தை தூண்டுதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலூர் எம்.எல்.ஏ. சாமி, மதுரை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தமிழரசன், மேலூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட 53 பேர் திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது மாஜிஸ்திரேட்டிடம் அதிமுகவினர், எங்களை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதால் காயம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு சாப்பாடு கொடுக்கவில்லை. காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர்.

மருங்காபுரி ஒன்றியத்தை சேர்ந்த ரெங்கசாமி என்பவர் ரத்தக்கறை படிந்த வேட்டியுடன் முன்னால் வந்து போலீசார் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களை காட்டினார்.

இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளித்தபிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் 2 போலீஸ் வேன்களில் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். சாமி எம்.எல்.ஏ. உள்பட 52 பேரையும் 13ம் தேதி வரை காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+