திருமங்கலம்- நாளை வருகிறது துணை ராணுவ படை
மதுரை: இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 8 கம்பெனி துணை ராணுவ படையினர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருமங்கலம் வருகின்றனர்.
திருமங்கலத்தில் வரும் 9ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே பாக்கியுள்ள நிலையில் திமுக-அதிமுக இடையிலான மோதல், வேட்பாளர்களுக்கு பண பட்டுவாடா உச்ச கட்டத்தில் உள்ளது.
இரு தரப்பினரும் மாறி மாறி தேர்தல் கமிஷனிடம் புகார் கூறி வருகின்றனர். இந் நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவின் ஆலோசனைப்படி மத்தியப் படையை தலைமை தேர்தல் ஆணையம் திருமங்கலத்துக்கு அனுப்புகிறது.
இந்த துணை ராணுவப் படையினர் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் வாக்குப்பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதியின் தேர்தல் பணிகளை கண்காணிக்க தேர்தல் பார்வையாளராக கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் சிங் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
குப்தா மீது நம்பிக்கை-துணை கமிஷனர்:
இதற்கிடையே அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக நரேஷ் குப்தா மீது திமுக குற்றம் சாட்டியுள்ளது குறித்து பதிலளித்த மத்திய தேர்தல் ஆணைய துணை கமிஷ்னர் ஜே.பி.பிரகாஷ்,
நரேஷ் குப்தா மீது தேர்தல் ஆணையத்துக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றார்.
அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக நரேஷ் குப்தா மீது புகார் கூறப்படுவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் கமிஷ்னரிடம் அதிமுக மனு:
இந் நிலையில் திருமங்கலத்தில் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற துணை ராணுவ படையை உடனே பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கோரி தலைமை தேர்தல் கமிஷனரிடம் அதிமுக கூட்டணி மீண்டும் மனு அளித்தது.
நேற்று காலை தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமியை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிமுக எம்பிக்கள் மலைச்சாமி, மைத்ரேயன், மதிமுக எம்.பி.க்கள் கிருஷ்ணன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நூருல் ஹூடா ஆகியோர் சந்தித்து இந்த மனுவை அளித்தனர்.
திமுகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் அபாயம் இருப்பதால், வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடிகளில் மத்திய அரசு ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதிமுகவினர் உயிருக்கு ஆபத்து-மைத்ரேயன்:
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ராஜ்யபசா எம்பி மைத்ரேயன்,
பொய் வழக்குகளைப் போட்டு அதிமுகவினரை தேர்தல் பணி செய்ய விடாமல் திமுக அரசு தடுத்து வருகிறது. துணை ராணுவ படையை இல்லாவிட்டால், போலீசார் உதவியுடன் திமுகவினரின் வன்முறை நீடிக்கும். இதனால் பொதுமக்கள் ஓட்டுப்போட அச்சப்படுவர். அதிமுகவினரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்றார்.












Click it and Unblock the Notifications