திமுகவுக்கே ஓட்டு விழுமாம்...அதிமுகவின் கேலிக்குறிய புகார்

டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி டி.ராஜா, மதிமுக எம்.பி. பொள்ளாச்சி கிருஷ்ணன் ஆகியோர் இன்னொரு புகார் மனு அளித்தனர்.
போலி வாக்குப் பதிவு எந்திரங்களாம்...:
அதில், திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 190 வாக்குச் சாவடிகளில் 130 வாக்குச் சாவடிகளில் அதிகாரிகள் துணையுடன் போலியான வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு வர ஆளும் திமுக முயற்சிப்பதாகவும்,
தொழில்நுட்ப உத்தியாம்...:
தமிழக உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட், மூத்த அரசு அதிகாரி சையத் முனீர் ஹோடா ஆகியோர் மின்னணு இயந்திரங்களில் தொழில்நுட்பரீதியாக மாற்றம் செய்வதற்கான உத்தியை, திமுகவுக்கு சாதகமாக வகுத்து கொடுத்துள்ளதாகவும்,
அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் திமுகவுக்கு விழுமாம்...:
மேலும், போலி எந்திரங்கள் மூலம் தேர்தல் நாளன்று வாக்காளர், அதிமுக வேட்பாளரின் சின்னத்தில் ஓட்டுப் போட்டால் கூட தாமாகவே திமுக வேட்பாளருக்கு வாக்கு பதிவு ஆகும் வகையில் தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
புகார் நிராகரிப்பு:
ஆனால், இந்த புகார்களை தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி நிராகரித்துவிட்டார்.
வாக்குப் பதிவு மின்னணு எந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை விளக்கிய கோபால்சாமி, அதில் முறைகேடு என்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்று செயல் விளக்கத்துடன் விளக்கினார்.
கோபால்சாமி கூறுகையில், வாக்குப் பதிவு இயந்திரங்களை திடீரென்று யாருந் வந்து மாற்றிவிட முடியாது. எண்ணிலக்கம் கொண்ட ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரங்களும் கலக்கப்பட்டு பலதரப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தேர்தல் முடிவடைந்ததும், அதே எண்ணிலக்கம் கொண்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் தான் வாக்கு எண்ணும் பகுதிக்கு வந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்திய பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்பதையும் சொன்ன கோபால்சாமி, அதிமுக தரப்பின் இந்த கேலிக்குறிய புகாரை நிராகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பி மைத்ரேயன்,
அதிகாரப்பூர்வமான மின்னணு இயந்திரங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பானவை என்பது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கினர் என்று சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தார்.
அதே நேரத்தில் வைகோ திருமங்கலத்தில் மனு:
இவ்வாறு இவர்கள் டெல்லியில் மனு கொடுத்து தேர்தல் ஆணையத்தால் முகத்தில் கரி பூசப்பட்டு திரும்பிய அதே நேரத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், தளவாய்சுந்தரம், பொன்னையன், மதுசூதனன், முன்னாள் எம்.பி.ராஜன் செல்லப்பா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், எம்பி மோகன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில பொது செயலாளர் பி.வி.கதிரவன் மற்றும் பலர் திருமங்கலத்தில் தேர்தல் பார்வையாளர் சுனில்குமார் குஜூரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
பின்னர் வைகோ நிருபர்களிடம் பேசுகையி்ல்,
திருமங்கலம் தொகுதியில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மிகப்பெரிய மோசடி நடக்க உள்ளதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. வாக்குப்பதிவு எந்திரத்தில் ஆளும் கட்சிக்கு சாதகமாக வாக்குகளை பதிவு செய்வதற்கு திட்டமிட்டு தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு இந்த காரியத்தை செய்திருக்கிறார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளோம்.
அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எயந்திரங்களும் சோதனை செய்யப்பட வேண்டும். 190 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் முதல் வாக்குப்பதிவு எந்திரம் மட்டுமல்லாமல் மாற்றாக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும் சோதனை செய்ய வேண்டும். வேட்பாளர் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் வைத்து இந்த பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்.
வாக்குச்சாவடி பணியில் மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அத்துடன் மாநில அரசு ஊழியர்களும் ஈடுபடுகிறார்கள். அவர்களில் ஆளும் கட்சிக்கு சாதகமான பலர் தவறான செயல்களில் ஈடுபடாமல் தடுக்கப்பட வேண்டும் என்று கோரினோம் என்றார்.
வாக்குப் பதிவு எந்திரம் Vs ஜெ- நீண்ட கதை:
கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுகவின் தோல்விக்கு வாக்குப் பதிவு எந்திரங்களைத் தான் ஜெயலலிதா புகார் கூறினார் என்பது நினைவுகூறத்தக்கது. இதனால் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று கூறி தனது தோல்வியை மறைக்க எந்திரங்களைக் குறை சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவின் இந்த புகாருக்கு, இந்த எந்திரங்களைத் தயாரிக்கும் பிஇஎல் நிறுவனம் விளக்கம் தந்து தந்து சலித்துப் போனதும் குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாக்குச் சாவடிகளில் லட்சக்கணக்கான ஓட்டுப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு தேர்தல்கள் மிக நேர்த்தியாக நடத்தப்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும் மீண்டும் மீண்டும் இந்த எந்திரங்களைக் குறை கூறிக் கொண்டே உள்ளார்.












Click it and Unblock the Notifications