ராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்-வைகோ
ஈரோடு: ராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவத்தால் வெல்ல முடியாது என்று ஈரோட்டில் நடந்த ம.தி.மு.க தேர்தல் நிதியளிப்பு விழாவில் பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
ஈரோடு மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் நிதி, மற்றும் கழக வளர்ச்சி நிதியளிப்பு விழா அக் கட்சியின் அலுவலகமான அண்ணா அறிவகத்தில் நடைபெற்றது. ரூ.35 லட்சம் வைகோவிடம் வழங்கப்பட்டது.
அப்போது வைகோ பேசுகையில்,
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்படுகிறார்கள். 4 ஆண்டுகளாக இந்திய அரசு இலங்கை அரசுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்து வருகிறது. அதனால் தான் இந்த அளவு பாதிப்பு இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால், விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. மத்திய அரசின் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிகளும் இலங்கை தமிழர் விரோத போக்கை கண்டுகொள்ளவில்லை.
ஹிட்லர் ஆட்சியில் கூட நடக்காத கொடுமை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது. இதைத்தான் சினிமா இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் பேசினார்கள். இதில் என்ன தவறு உள்ளது?.
போபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சினையில் இருந்து விடுபட ராஜீவ் காந்தி இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பினார். ராணுவம் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது. இதை சீமான் சொன்னதில் என்ன தவறு உள்ளது?
தற்போது ராணுவ உதவி மட்டுமின்றி உளவு அமைப்பான ரா மூலமும் இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு உதவி செய்து வருகிறது. இந்தியா கொடுத்த பணத்தில் ஆயுதம் வாங்கி இலங்கை அரசு நம் இனத்துக்கு எதிராக பயன்படுத்துகிறது.
உண்மையில் விடுதலைப் புலிகள் முல்லைத் தீவில் உள்ள 6 லட்சம் தமிழர்களுக்கு அரணாக உள்ளனர். அவர்களை வீழ்த்த முடியாது. ராஜபக்சே கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள்தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும்.
இனப் படுகொலையை மன்மோகன் சிங் அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. ஆனால் வாஜ்பாய் அரசு ஒரு நாளும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை.
நமக்கும் ஒரு காலம் நிச்சயம் வரும். உழைப்பு வீண் போகாது. தை பிறந்தால் வழி பிறக்கும். அதிமுக கூட்டணி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்லும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications