இலங்கை கருணாநிதியுடன் ராமதாஸ், வீரமணி, திருமா ஆலோசனை
சென்னை: முதல்வர் கருணாநிதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தி.க. தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் சந்தித்து இலங்கையில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்த பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேசுமாறு வலியுறுத்தினர்.
முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் ராமதாஸ், வீரமணி, திருமாவளவன் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.
அப்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்கள் கருணாநிதியை சந்தித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய கருணாநிதி, இலங்கையில் தமிழினம் சந்தித்து வரும் இழிவு நிலை குறித்து ராமதாஸ், வீரமணி, திருமாவளவன் ஆகியோர் கவலை தெரிவித்தனர்.
அது அவர்களது கவலை மட்டுமல்ல, எனது கவலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் கவலையும் ஆகும். இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் மீண்டும் பேசுவதாக தெரிவித்தேன் என்றார்.
வீட்டுக்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அங்கு தமிழர்கள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளுமாறு முதல்வரிடம் தெரிவித்தோம். அவரும் பேசுவதாக உறுதியளித்துள்ளார் என்றார்.
கி.வீரமணி பேசுகையில், ஒட்டுமொத்த தமிழினத்தையும் இலங்கை அரசு அழித்தொழித்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்தி தமிழர்களைக் காக்க வேண்டும் என்று முதல்வரிடம் வேண்டி கேட்டுக் கொண்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications