முகாமில் இன்ஸ்பெக்டரை சிறை வைத்த அகதிகள்
சென்னை: சென்னை, பூந்தமல்லியில் உள்ள அகதிகள் முகாமில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அகதியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அகதிகளும், இரண்டு விடுதலைப் புலி போராளிகளும், இன்ஸ்பெக்டரை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து 23 அகதிகளும், 3 விடுதலைப்புலிகளும் பூந்தமல்லியில் உள்ள அகதிகள் முகாமில் கடந்த மாதம் 22-ந்தேதி தங்க வைக்கப்பட்டனர்.
இந்த முகாம் ஏற்கனவே தனி சிறையாக செயல்பட்டு வந்தது. இதில் இருந்த கைதிகள் புழல் சிறைக்கு மாற்றப்பட்டதால் இந்த சிறைச்சாலை இயங்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இதை அகதிகள் முகாமாக மாற்றி விட்டனர்.
இந்த முகாமில் தங்கி இருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிவகரன் (30) மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். இதனால் தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரமூர்த்திக்கு, சிவகரன் கோரிக்கை வைத்தார்.
ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சிவகரன் மனு மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் சிவகரன் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. நேற்று சிவகரன் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி 2 விடுதலைப்புலிகளும், 23 அகதிகளும் போராட்டத்தில் குதித்தனர்.
முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் லோகநாதனை ஒரு அறையில் தள்ளி மூடி விட்டனர்.
இதையடுத்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் பறந்தது.
இதையடுத்து சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் ஜாங்கிட், துணை ஆணையர் பாலநாகதேவி, தாசில்தார் சாந்தாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
அகதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து லோகநாதன் மீட்கப்பட்டார். மேலும், சிவகரனை உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகள் சம்மதித்தனர். இதைத் தொடர்ந்து மதுரவாயல், மீனாட்சி மருத்துவமனைக்கு சிவகரன் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கிருந்து பின்னர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
சிவகரன் சிகிச்சை பெற்று வரும் வார்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டரை அகதிகள் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications