'இலங்கை'- தமிழக மாணவர்கள் வகுப்பு புறக்கணி்ப்பு

சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கல்லூரி மாணவர்கள் அமைதியான முறையில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை தமிழர்கள் காப்பற்றப்பட வேண்டும், எங்கள் உணர்வு மங்கிடவில்லை, தமிழர்கள் இன்னும் நாதியற்றுப் போகவில்லை போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது முன்னெச்சரிக்கையாக கல்லூரியின் மெயின் கேட் மூடப்பட்டது. அன்னியர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரிக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அதே போல கோவை, உடுமலைப்பேட்டையிலும் அரசு கலைக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
சேலம் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகவும் இலங்கை ராணுவத்தை கண்டித்தும் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தேசிய கொடி வரையப்பட்ட காகிதத்தை தீயிட்டு கொளுத்தப்பட்டது.
திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம், அரசு சட்டக் கல்லூரி, ஈ.வெ.ரா அரசுக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் உருவ பொம்மை ஒன்றை கல்லூரி முன்பு எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
வேலூரில் உள்ள முத்துரங்கம் அரசுக் கலைக்கல்லூரி மாணவ-மாணவிகளும் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போலீசார் இடையூறு கூடாது-ராமதாஸ்-தா.பா:
இந் நிலையில் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தில் வரும் 22, 23ம் தேதிகளில் மாணவர்கள் நடத்தவுள்ள போராட்டத்துக்கு போலீசார் இடையூறு செய்யக் கூடாது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் கோரியுள்ளனர்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைத் தமிழர்களை அடியோடு அழிக்க வேண்டும் என்று இனவெறி சிங்கள அரசு கொடூரத்தின் உச்சிக்குச் சென்று முப்படைகளையும் கொண்டு பச்சிளங் குழந்தைகள், பெண்கள் அனைவரையும் படுகொலை செய்து விட்டு, வீடுகள், மசூதிகள், கோவில்கள், தேவாலயங்கள் அனைத்தையும் தரைமட்டம் ஆக்கி வருகிறது. இந்தக் கொடூர செயலை தடுத்து நிறுத்தும் வண்ணமாக இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும்.
அங்கு அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள், திரைப்படத் துறையினர், வணிக அமைப்புகள், மாணவர் சங்கங்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
மாணவர்களும் தங்களுக்கு உள்ள உணர்வை வெளிப்படுத்த அறவழியில் அமைதி வழியில் வகுப்புகளை புறக்கணிக்கின்றனர். இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அமைதி முறையில் போராட்டம் நடத்துகின்றனர். மாணவர்-மாணவிகள் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவ-மாணவிகள் அறவழியில் 22, 23ம் தேதிகளில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக மாணவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த மாணவர் போராட்டத்திற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்கள் ஆதரவு உண்டு. அமைதி வழியில், அற வழியில் வகுப்புகளை புறக்கணித்து அவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு காவல்துறையினர் எந்தவித இடையூறும் செய்யாமல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை முல்லைத் தீவில் மரணத்தின் விளிம்பில் இருக்கும் 6 லட்சம் தமிழ் மக்களின் உயிர் காக்கும் போராட்டத்தை வகுப்புகளைப் புறக்கணிப்பதன் மூலம் மாணவர்கள் தொடங்கி இருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.
இந்தப் போராட்டத்தில் மாணவர்களுக்கு காவல்துறை எந்தவித அச்சுறுத்தலையும் செய்யக் கூடாது. போராடும் மாணவர்கள், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காமல் அமைதியான முறையில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications