கர்கரே, உண்ணிகிருஷ்ணன், ஓம்ப்ளே உள்பட 9 பேருக்கு அசோக் சக்ரா விருது?

ஆண்டு தோறும் மரணத்திற்குப் பின்னர் வழங்கப்படும் மத்திய அரசின் வீர விருது அசோக் சக்ரா. இந்த ஆண்டுக்கான விருது 9 பேருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான பட்டியலை மத்திய அரசு இறுதி செய்து விட்டது. குடியரசு தினத்தின்போது இந்த விருதுகள் அளிக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு 25ம் தேதி வெளியிடப்படும்.
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடும் முயற்சியின்போது வீர மரணத்தைத் தழுவிய ஹேமந்த் கர்கரே, ஓம்ப்ளே, சந்தீப் உண்ணிகிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல, மும்பை தீவிரவாதிகள் தாக்குதலின்போது நாரிமன் இல்லத்தில் வீர மரணமடைந்த கமாண்டோ வீரர் ஹவில்தார் கஜேந்திர சிங் பிஷ்ட் பெயரும் இப்பட்டியலில்
இருப்பதாக தெரிகிறது.
மும்பை சம்பவத்தில் வீர மரணம் அடைந்த விஜய் சலேஸ்கர், அசோக் காம்தே ஆகியோருக்கும் அசோக் சக்ரா விருது வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இன்னும் 2 நாட்களில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல டெல்லி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எம்.சி சர்மா (இவர் டெல்லியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் உயிர் நீத்தவர்), ராணுவ அதிகாரி கர்னல் ஜோஜின் தாமஸ், ஒரிசா காவல்துறை அதிகாரி சத்பதி, ஹவில்தார் பகதூர் சிங் வோரா, மேகாலயா காவல் அதிகாரி டியங்டோ ஆகியோரது பெயர்களும் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.


Click it and Unblock the Notifications
