கல்மடு அணைக்கட்டு குண்டு வைத்துத் தகர்ப்பு - 3000 ராணுவ வீரர்கள் பலி?

அணை தகர்க்கப்பட்டதை ராணுவம் உறுதி செய்துள்ளது. இருப்பினும் பெருமளவிலான ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை இரு தரப்பும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
அணைக்கட்டு தகர்க்கப்படுவதையும், அது உடைந்து பெரும் வெள்ளம் வெளியேறுவதையும், இலங்கை பாதுகாப்புப் படை வீடியோவில் படம் பிடித்து வெளியிட்டுள்ளது.
தண்ணீர் வெள்ளமெனப் பாய்ந்து அருகில் உள்ள பாசன வயல்களில் பாய்கிறது. சாலையும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இதுவரை 500 ராணுவ வீரர்களின் உடல்களை புலிகள் மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முல்லைத்தீவை பிடிக்க ராணுவம் எத்தனித்து வருகிறது. ஆனால் முன்னேற விடாமல் புலிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஸ்வமடு பகுதிக்கு அருகில் உள்ள கல்மடுக்குளம் அணைக்கட்டை விடுதலைப் புலிகள் சக்தி வாய்ந்த குண்டுகளைப் பயன்படுத்தி தகர்த்துள்ளனர்.
இதனால் அணை உடைந்து தண்ணீர் வெள்ளமென பாய்ந்தது. இதை எதிர்பார்க்காத ராணுவத்தினர் அதில் சிக்கிக் கொண்டனர்.
அதேசமயம், புலிகளும் அதிரடியாக திடீர்த் தாக்குதலில் ஈடுபட்டனர். வெள்ளம் மற்றும் புலிகளின் தாக்குதலால் ராணுவத்தினர் நிலை குலைந்தனர்.
இந்த இரு முனைத் தாக்குதலில் 3000க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இதை விடுதலைப் புலிகள் தரப்பும், ராணுவமும் உறுதி செய்யவில்லை.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முல்லைத்தீவை வளைத்துக் கொண்டிருக்கும் அனைத்துப் படைப் பிரிவினருக்கும் இடையிலான தகவல் தொடர்பும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாம். ராணுவம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும் ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா அணைக்கட்டு உடைக்கப்பட்டது உண்மைதான் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கல்மடு குளத்தின் அணைக்கட்டு சனிக்கிழமை காலை தகர்க்கப்பட்டதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பரந்தன் - முல்லைத்தீவு (ஏ-35) சாலையின் ஒரு பகுதி, இராமநாதபுரம், தர்மபுரம் மற்றும் விசுவமடு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் வெள்ளம் நான்கு அடி உயரத்திற்கு பாய்ந்துள்ளது. இச்சம்பவத்தினால் படையினரும் பாதிப்படைந்துள்ளனர். எனினும் இழப்புக்கள் தொடர்பான தகவல்கள் தெரியாது.
கல்மடு குளம் 4.5 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டதுடன், அது 500 ஏக்கர் நிலப்பரப்புக்கு தேவையான நீர்வளத்தையும் கொண்டுள்ளதாக என்றார்.
அணைக்கட்டு தகர்ப்பு மற்றும் ராணுவத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளதால் ராணுவத்தினர் பெருமளவில் உயிரிழந்திருப்பதும் உண்மையாகவே இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.
அது உண்மையானால் ராணுவத்திற்கு இது மிகப் பின்னடைவாக அமையும் என கருதப்படுகிறது.
இதற்கிடையே, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப்புலிகளின் மேலும் இரண்டு முகாம்களை கைப்பற்றிவிட்டதாகவும் ராணுவம் அறிவித்து உள்ளது.
இந்த முகாம்களில், விடுதலைப்புலிகளின் முன்னணி தளபதிகள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய அறைகள் உள்ளதாகவும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.
பரந்தன்-பூநகரி நெடுஞ்சாலைக்கு தெற்கே ராணுவத்தினருடன் நடைபெற்ற கடும் சண்டையில் விடுதலைப்புலிகள் பலர் பலியானதாகவும் ராணுவ அமைச்சகம் அறிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications