ராமலிங்கராஜு, ராமராஜுவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
ஹைதராபாத்: சத்யம் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு, அதன் முன்னாள் நிர்வாக இயக்குநர் ராமராஜு மற்றும் இவர்களின் வலதுகரமான சிஎப்ஓ சீனிவாஸ் வட்லாமணி ஆகிய மூவருக்கும் ஜாமீன் மறுத்துவிட்டது ஹைதராபாத் நீதிமன்றம்.
சத்யம் மோசடி குறித்து தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து ஜாமீன் கோரி இம்மூவரும் ஹைதராபாத் 6-வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ராஜு சகோதரர்கள் மற்றும் வட்லாமணி மூவருக்கும் ஜனவரி 31-ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டனர்.
ராமலிங்க ராஜுவின் குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட எஸ்ஆர்எஸ்ஆர் ஹோல்டிங்ஸ் பொது மேலாளர் கோபால கிருஷ்ண ராஜுவுக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை.
இவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிஐடி போலீஸ் தனி மனு தாக்கல் செய்துள்ளது.
சத்யம் நிறுவனத்தை தணிக்கை செய்த பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர் நிறுவன அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன் மற்றும் டி.சீனிவாஸ் இருவரும் தற்போது சிறையில் உள்ளனர்.
இவர்களுக்கு வரும் ஜனவரி 29-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications