கருணாநிதி இல்லாமல் தமிழ் வரலாறு இல்லை-ஜெகத்ரட்சகன்
சென்னை: முதல்வர் கருணாநிதி இல்லாமல் யாரும் தமிழர்களின் வரலாற்றை எழுதிவிட முடியாது என்று ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் தமிழ் மக்களை நாள்தோறும் காவு கொள்கிற ராஜபக்சேயின் அரசை கண்டித்து உலகம் எங்கும் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசும் நேற்றைய தினம் சண்டையை நிறுத்து, தமிழினப் படுகொலை நிறுத்து எனக்குரல் கொடுத்துள்ளது.
சிலர் இன்று இலங்கை தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்துவதாக அறிவித்து விட்டு, தலைவர் கருணாநிதியையும், திமுகவையும் இலங்கை தமிழர்களுக்கு விரோதமானவர்களை போல் சித்தரிக்க முயலும் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பது வேதனையை தருகிறது.
முதல்வர் கருணாநிதி உலக தமிழர்களின் காதிலே பூ சுற்றுகிறாராம், இன்னும் சிலர் கருணாநிதி நாடகம் ஆடுகிறார் என கருத்து தெரிவிக்கின்றனர்.
இவர்களை என்னவென்று சொல்வது? இதுவரையில் இவர்கள் தங்கள் அரசியலில் அல்லது ஆயுட்காலத்தில் ஏதேனும் ஒரு பிரச்சினையை தீர்த்து வைத்ததுண்டா? பிரச்சினையை வளர்த்து விட்டதாக வரலாறுகள் பல உண்டே தவிர ஏதாவது பிரச்சினை ஒன்றை மக்கள் நலனுக்காக தீர்த்ததுண்டா?
வீடு பற்றி எரிகிறது. எல்லோரும் வாருங்கள் நெருப்பை அணைப்போம் என்று சொல்ல வேண்டுமே தவிர, நான் பெட்ரோலையும், மண்ணெண்ணையும் ஊற்றி அணைக்கும் பெரும் முயற்சியில் ஈடுபடும் போது என் அண்ணன் தண்ணீர் ஊற்றி அணைக்க முயல்கிறானே இது நியாயமா? முறையாகுமா? என்று கேட்டால் அவனை என்ன பெயரிட்டு அழைப்போமோ? அப்படி தான் இவர்களையும் நாம் அழைக்க வேண்டியுள்ளது.
ஈழத்தில் போராடும் போராளியின் ரத்தத்தில் நனைத்து தான் என் கூந்தலை முடிவேன் என சபதமெடுத்து அறிக்கைகள் வெளியிடும் அபூர்வ சிந்தாமணியோடு, தேர்தல் கூட்டு சேருவதற்காக இந்த திடீர் தலைவர்கள், தங்கள் கற்பனை நயத்தோடு முதல்வரை திட்ட முயல்கிறார்கள்.
தேர்தலுக்காக திருவோடு ஏந்தி போராட முற்பட்டிருக்கும் புரட்சியாளர்களே, ஒன்றை நினைவில் வையுங்கள். இந்திய அரசியல் அரங்கில் தமிழன் என்ற பெருமையோடு அனைவரும் நடைபோட அடித்தளமிட்டதே திமுகவும், முதல்வர் கருணாநிதி தான் என்பதை நீங்களே மறுத்திட முடியாது.
இலங்கையிலே செல்வநாயகமும், அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும் தமிழர்களுக்காக போராட ஒரு கட்சியை அமைத்தார்களே. அதன் பெயர் என்ன தெரியுமா? இலங்கை திராவிட முன்னேற்ற கழகம்.
இலங்கை திமுகவிற்கும், தமிழ்நாட்டு திமுகவிற்கும் தொடர்பு இருக்கிறது எனச்சொல்லி, திமுக தலைவர்கள் அண்ணாவும், கருணாநிதியும் இலங்கைக்கு வரக்கூடாது என தடை உத்தரவை பிறப்பித்தார் அன்றைய இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா.
இலங்கை திமுகவும், தமிழ்நாடு திமுகவும் உணர்விலே ஒன்றானவை தவிர, அவர்கள் தங்கள் உரிமைக்காக தனியாக இயக்கம் நடத்துகின்றனர். போராடுகின்றனர் என விளக்கம் அளிக்கப்பட்டது.
பூ சுற்றுவதாக சொல்லி பூகோளத்தை படிக்க தொடங்கியிருக்கிற புத்திசாலிகளே இலங்கையில் செத்து மடியும் தமிழர்களுக்காக 1977ல் பேரணி நடத்தப்பட்ட போது, இன்றைக்கு போராடும் தலைவர்களில் பலர் அன்றில்லை.
அது உங்களுக்கு தெரியுமா? ஒரு முக்கியமான தலைவரின் அன்றைய பல்லவியே வேறு. இலங்கை தமிழருக்காக இன்றைக்கு பாடுகிற முகாரியை அவர் அன்றைக்கு பாடவில்லை. அவர் பாரத போர் பற்றிய கதைகளை புனைந்து தனது செய்தியிலே வேறு விதமாக பாடிக்கொண்டிருந்தார்.
எப்படியோ இன்றாவது ஈழத்தமிழர்களுக்காக போராட முனைந்தீர்களே அதுவரை சரிதான். அதை விட்டு விட்டு, முதல்வர் மீது சேற்றை வாரி இறைக்க முற்படாதீர்கள்.
கருணாநிதியையும், திமுகவையும் ஒதுக்கி வைத்து விட்டு, உலகில் எங்கும், எவரும் ஒரு தமிழ் வரலாற்றை எழுத முடியாது. ஒவ்வொரு தமிழனின் வரலாற்றிலும், கருணாநிதியும், அவரது கேடயமான திமுகவும் இணைந்தே தெரியும்.
அந்த வரலாற்று வேங்கையான முதல்வர் கருணாநிதி, திமுகவோடும் தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து ஈழத்தமிழர்களை காத்திட குரல் கொடுப்போம்.
இலங்கை தமிழர் நல உரிமை பேரவை சார்பில் நாளை சென்னையிலும், ஞாயிற்றுக்கிழமை மற்ற மாவட்டங்களில் நடைபெற உள்ள பேரணி பொதுக்கூட்டங்களிலும் நம்முடைய ஜனநாயக முன்னேற்றக்கழக நிர்வாகிகளும், செயல்வீரர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications