இலங்கையின் 'ஐடி ஆலோசகர்' நாராயணமூர்த்தி!

முதல் நடவடிக்கையாக, இலங்கையின் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு சர்வதேச ஆலோசகராக இந்தியாவைச் சேர்ந்த இன்போஸிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தியை நியமித்துள்ளார் ராஜபக்சே.
2009யை 'ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஆண்டு' என அறிவித்துள்ளது இலங்கை அரசு. இந்த சிறப்புத் திட்டத்தின் துவக்க விழா நேற்று இலங்கை அதிபரின் தலைமைச் செயலகத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக நாராயணமூர்த்தி பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில்பேசிய இலங்கை அதிபர் ராஜபக்சே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுடபத் துறை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நாராயணமூர்த்தியை இந்தப் புதிய பொறுப்பில் அமர்த்துவதாகவும், அதற்கான நியமனக் கடிதம் இந்த விழாவிலேயே தரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் கிராமப் புறங்களில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புக்கள் மூலம் ஆங்கில அறிவை வளர்க்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
கிராமப்புற வேலைவாய்ப்பில் இந்தியாவின் மாடல் திட்டங்களை எப்படி வெற்றிகரமாக செயலாக்கினோம் என்பது குறித்து தான் விளக்கியது ராஜபக்சேவுக்குப் பிடித்துவிட்டதால், அதை இலங்கையிலும் செயல்படுத்த விரும்புகிறார். அதற்காகவே என்னை இந்தப் பதவியில் நியமித்துள்ளார் என்றார் நாராயணமூர்த்தி.
இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே, ஹைதராபாத்தில் ஆங்கில கல்வி குறித்த சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அது இலங்கையின் கல்வி முன்னேற்றத்துக்கும் வேலை வாய்ப்புக்கும் பெரிதும் உதவும் என்று தெரிவித்தார் இந்திய அயல் மொழிகள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அபய் மவுரியா.
இந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை இந்தியாவில் ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்படுமாம்.
'ஆங்கிலமும் ஐடி அறிவும் இருந்தால், உலகையே வெல்லலாம். துரதிருஷ்டவசமாக, எங்கள் நாட்டுக்கு அப்படி ஒரு வாய்ப்பே கிடைக்கவில்லை, தீவிரவாதம் மற்றும் போர்ச் சூழலால். இனி அந்த நிலை இருக்காது. இலங்கையும் பெரும் வளர்ச்சி பெறும். உலகப் புகழ்பெற்ற ஐடி நிர்வாகி நாராயணமூர்த்தி அதற்கு துணை நிற்பார்' என்றார் இறுதியில் பேசிய அதிபர் ராஜபக்சே.
இலங்கையைச் சேர்ந்த இந்த ஆசிரியர்களின் ஆங்கில கல்வி பயிற்சிக்காக இந்தியா ரூ.36 கோடி செலவு செய்துள்ளது. உணவு, தங்குமிடம் அனைத்தும் இந்திய அரசின் பொறுப்பே.












Click it and Unblock the Notifications