பாமகவுக்கு காங். கல்தா?- டெல்லி விரைந்த ராமதாஸ்
சென்னை: இலங்கைப் பிரச்சனையில் பாமக மீது காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கோபத்தில் உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ள நிலையில் தனது கட்சியின் நிலையை விளக்க, பாமக நிறுவனர் ராமதாஸ் டெல்லி விரைந்துள்ளார்.
முன்னதாக, தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம், சென்னையில் ராமதாஸை சந்தித்து சோனியாவின் கோபத்தை எடுத்துக் கூறியதோடு, நீங்கள் கூட்டணியில் தான் இருக்கிறீர்களா, இருக்க விரும்புகிறீர்களா என்பதை விளக்குமாறு கோரியதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்தே டெல்லி விரைந்துள்ளார் ராமதாஸ்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகள் இரு அணிகளாகப் பிரிந்துள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் ட்டணியில் உள்ள பாமகவும் இணைந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கியது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இணைந்து இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையை உருவாக்கியுள்ளன.
இந் நிலையில் இலங்கைப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் நிலையை விளக்கி சென்னையில் மயிலாப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக் கூட்ட்ததில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,
இலங்கைப் பிரச்சனையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய 3 பெரிய கட்சிகளும், இந்திய அரசுக்கு ஆதரவாக உள்ளன. இதனால் தான் தமிழகம் அமைதியாக இருக்கிறது. ஆனால், ராமதாஸ், திருமாவளவன் போன்றோர் வேறுபட்டு நிற்கின்றனர். இது ஏன் என்பதை விளக்க வேண்டும் என்றார்.
சிதம்பரத்தின் பேச்சு, பாமகவிடம் காங்கிரஸ் விளக்கம் கேட்பதாகவே கருதப்பட்டது.
இந் நிலையில் மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க தமிழக டெல்லி சென்ற சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனமும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவும் தமிழக அரசியல் நிலவரம் கூட்டணியில் உள்ள கட்சிகளின் செயல்பாடு ஆகியவை குறித்து மேலிடத்திடம் தெளிவாக விளக்கினர்.
அப்போது ராமதாசின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். இதையடுத்தே, ராமதாஸ் கூட்டணியில் இருக்க விரும்புகிறாரா இல்லையா என்று கேளுங்கள் என்று மேலிடம் சுதர்சனத்திடம் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து சென்னை விரைந்த சுதர்சனம், நேற்று ராமதாஸை அவசரமாக சந்தித்து காங்கிரஸின் கோபத்தை எடுத்துக் கூறினார்.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறீர்களா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்துங்கள் என்று சுதர்சனம் வெளிப்படையாகவே கேட்டதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து பாமகவின் நிலையை விளக்க ராமதாஸ் நேற்று மாலை அவசரமாக டெல்லி விரைந்ததாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
முன்னதாக தன்னை சுதர்சனம் சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து, இலங்கையில் போரை நிறுத்த உதவ வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன்.
இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோருக்கு கடிதம் எழுதப் போவதாக அண்மையில் கூறியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக சுதர்சனம் என்னை சந்தித்துப் பேசினார்.
ஈழத்தமிழர் விவகாரம் கொழுந்துவிட்டு எரிகிறது. அங்கு தமிழ் இனமே கொடூரமாக அழிக்கப்படுகிறது. போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என சர்வதேச நாடுகள் பலவும் குரல் கொடுத்தன. ஆனால், ராஜபக்சே, ஹிட்லரை விட மோசமான வகையில் மனிதாபிமானம் இல்லாமல் தமிழர்களை கொன்று குவித்து வருகிறார்.
பாதுகாப்பான இடம் என்கிறார்கள் அங்கு தமிழர்கள் வந்தவுடன் குண்டு போடுகிறார்கள்.
இந் நிலையில் இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என நமது ஜனாதிபதி கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இப்படி வேண்டுகோள் விடுத்தால் மட்டும் போதாது. போரை நிறுத்துமாறு இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும். இந்தியா அவ்வாறு கூறினால் இலங்கை நிச்சயம் பணியும்.
மேலும் இலங்கையில் போரை நிறுத்துமாறு ஐ.நா. பாதுகாப்பு சபை, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஆகியவற்றில் இந்தியா முறையிட வேண்டும். அவ்வாறு செய்வதற்கான தார்மீக உரிமை இந்தியாவுக்கு உள்ளது. இந்தியா ஐ.நா. சபைக்கு சென்றால் இரண்டே நாளில் போர் நிறுத்தம் ஏற்படும்.
விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என தமிழக கட்சிகள் நிர்பந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஏற்கெனவே போர் நிறுத்தத்துக்கு தயார் என அறிவித்து விட்டார்கள்.
இனி இலங்கை அரசுதான் போரை நிறுத்த வேண்டும். அரசாங்கம் போரை நிறுத்தினால், உடனே போரை நிறுத்த விடுதலைப் புலிகளும் தயாராகவே உள்ளனர்.
ஆனால் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனை சரியல்ல. ஆயுதம் ஏந்தி போராடிய எந்த போராளிக் குழுவும் ஆயுதங்களை வீசிவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வந்ததாக வரலாறு இல்லை.
எனவே சண்டையை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என புலிகளை அழைப்பதே சரியானதாக இருக்கும்.
நமது மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட அப்போதைய இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் மற்றும் நமது வெளியுறவு அமைச்சகத்தின் தவறான அணுகுமுறையே காரணம்.
இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கை இன்றும் தொடர்கிறது. அதனை உடனே மாற்றிக் கொள்ள வேண்டும்.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இந்திய வெளியுறவுத் துறை செயலாளராகவும், வெளிநாட்டு விவகாரங்களில் ராஜீவ் காந்தியின் ஆலோசகராகவும் இருந்த ஏ.பி.வெங்கடேஸ்வரன் இப்போது பெங்களூரில் உள்ளார்.
இலங்கைப் பிரச்னையில் இந்தியா எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி மத்திய அரசு அவருடன் ஆலோசிக்க வேண்டும்.
இலங்கையில் கடந்த 1986ம் ஆண்டு, இதேபோல் ஒரு இனப்படுகொலை நடந்தபோது இந்திய அரசு உணவுப் பொருட்களை விமானம் மூலம் கொண்டு போட்டது. தற்போதும் முல்லைத்தீவில் தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் விமானம் மூலம் இந்திய அரசு உணவு பொட்டலங்களை போட வேண்டும்.
இதையெல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள், மத்திய அமைச்சர்கள் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து விளக்க வேண்டும்.
ராஜிவ் காந்தி உயிருடன் இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். இதைத்தான் நான் சுதர்சனத்திடம் வலியுறுத்தினேன் என்றார் ராமதாஸ்.
கருணாநிதி-காங் தலைவர்கள் சந்திப்பு:
இதற்கிடையே சுதர்சனம், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோர் திடீரென முதல்வர் கருணாநிதியை மருத்துவமனையில் தனித்தனியே சந்தித்துப் பேசினர்.
அறுவைச் சிகிச்சைக்குப் பின், மருத்துவமனையில் ஓய்வெடுத்து வரும் முதல்வர் கருணாநிதியை 10 நாள்களுக்கு யாரும் பார்க்க வரவேண்டாம் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்த நிலையில் பாமக விவகாரம் குறித்தே வாசனையும், சுதர்சனத்தையும் கருணாநிதி நேரில் அழைத்துப் பேசியதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications