For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உண்ணாவிரதம் இருப்பேன்-கருணாநிதி எச்சரிக்கை

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வக்கீல் மற்றும் போலீசாரிடம் சுமுக உறவு ஏற்பட வேண்டும் இல்லையென்றால் மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருக்க போவதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த 19ம் தேதி வக்கீல்கள் மற்றும் போலீசாருக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இது குறித்து முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கையில் தமிழினப் படுகொலையைக் கண்டித்து இங்குள்ள தமிழர்கள் அனைவரையும் கட்சி சார்பற்ற முறையில், தமிழக அரசின் சார்பிலேயே மத்திய அரசை வலியுறுத்தி, இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டுமென்று கோரிக்கை வைத்தோம். இதற்கான அறவழி போராட்டத்தில் தாங்களும் ஓரணியில் வந்து நிற்பதாக சொல்லி விட்டு, அரசியல் லாபத்திற்காக அந்த அணியை சிதைக்க நினைக்கிறார்கள்.

இலங்கைப் பிரச்னை என்றால் அது தங்களால் மட்டுமே நடைபெற வேண்டும்; திமுக, காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகளுக்கு அதில் தொடர்பு இருக்கக் கூடாது என்று திட்டமிட்டே செயல்படுகின்றனர்.

தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்ச்சியின் காரணமாகத் தான் முத்துக்குமார் தீக்குளித்தார். அவர் குடும்பத்துக்கு அரசின் சார்பில், அறிவிக்கப்பட்ட ரூ. 2 லட்சம் நிதியை வாங்கக் கூடாது என்று முத்துக்குமாரின் குடும்பத்தினரைத் தடுத்துவிட்டார்கள்.

இதிலிருந்தே அவர்கள் இலங்கை பிரச்சினையை தொடக்கத்திலேயே கட்சி பிரச்சினையாக கருதி செயல்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். அந்த நண்பர்களுக்கு இப்போது இலங்கையிலே தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முக்கியமல்ல. அந்த கோஷத்தை வைத்து, தமிழ்நாட்டில் தங்கள் அரசியலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியம்.

அதனால்தான் முழுக்க முழுக்க இங்கேயிருக்கிற திமுக, காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளின் கூட்டணியை உடைப்பதற்கு மக்களிடம் தவறான பிரசாரம் செய்கின்றனர்.

தமிழகத்தில் எந்த காரியத்துக்காக அமைதியாக யார் கிளர்ச்சி நடத்தினாலும், அங்கே போய் புகுந்து கொண்டு அவர்களை வன்முறையாளர்களாக மாற்றி, அதன் மூலம் சட்டம், ஒழுங்கு கெடுவதற்கு வழி வகுத்து, அதை பூதாகரமாக ஆக்கி, திமுக ஆட்சியைக் கவிழ்த்து விடலாம் என்று கனவு காணுகிறார்கள்.

தங்களுடைய கனவு வெற்றி பெற இப்போது அவர்களுக்கு கிடைத்திருக்கும் ஆயுதம் உண்மையிலேயே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அல்ல என்பதற்கு உதாரணம் -எதிர்பாராத விதமாக, திடீரென்று துரதிருஷ்டவசமாக வழக்கறிஞர்களுக்கும், போலீஸ்சாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அவர்களுக்கு பிரதான ஆயுதமாகக் கிடைத்து இருக்கிறது.

வழக்கறிஞர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கசப்பை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நான் தொடர்ந்து வேண்டிக் கொண்டு வருகிறேன். ஆனால், அதற்கான சூழல் உருவாகமல் பார்த்து கொள்வதில் பலர் அதிக கவன்த்துடன் இருக்கின்றனர்.

நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவைகளாக இருக்க, ஆற அமர அமர்ந்து பேசி நல்ல முடிவுகளை எடுப்போம்.

இதனை ஏற்று, எனது வேண்டுகோள்படி நல்லோர் சிலர் மனம் மாறி சுமூக உறவு ஏற்பட வழிவகுத்தால் எனக்கு மகிழ்ச்சி.

அந்த முடிவு எட்டப்படவில்லை என்றால் அது நிறைவேறும் வரையில் மருத்துவமனையிலே உண்ணாவிரதம் மேற்கொள்வேன்.

இம்முடிவை நான் மேற்கொள்வதா இல்லையா என்பது நீங்கள் தரும் பதில் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும். இல்லையென்றால் உண்ணாவிரதத்துக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X