'மும்பை'-கஸாப் மீது இன்று குற்றப்பத்திரிக்கை

Subscribe to Oneindia Tamil

Kasab
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சிக்கி கைதாகியுள்ள தீவிரவாதி முகம்மது அஜ்மல் கஸாப் மீது இன்று மும்பை போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கர தீவிரவாதத் தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி கஸாப் மட்டுமே.

குற்ற வழக்குகளில் கைதானவர்கள் மீது 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது சட்டம்.

இதையடுத்து கஸாப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மும்பை போலீஸார் ஆயத்தமாகியுள்ளனர். கிட்டத்தட்ட 2000 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிக்கை தயாராகியுள்ளது.

மும்பை எஸ்பிளனேடு பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

இந்த வழக்கின் விசாரணை மட்டும் ஆர்தர் சாலை சிறைச்சாலையில் நடைபெறும். பாதுகாப்பு காரணங்களுக்காக சிறைக்குள்ளேயே தனி கோர்ட் அமைக்கப்படுகிறது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பிரபல வக்கீல் உஜ்வால் நிகாம் ஆஜராகவுள்ளார். இவர்தான் சஞ்சய் தத் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு வழக்கிலும் ஆஜரானவர் என்பது நினைவிருக்கலாம்.

குற்றப்பத்திரிக்கை குறித்து உஜ்வால் நிகாம் சமீபத்தில் கூறுகையில், குற்றப்பத்திரிக்கை கிட்டத்தட்ட தயாராகி விட்டது. இறுதிக் கட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

வழக்கின் முக்கியத்துவம் கருதி, ஆர்தர் சாலை சிறைச்சாலைக்குள் அமைக்கப்படும் தனி கோர்ட்டில் விசாரணை நடைபெறும் என்றார்.

கடந்த வாரம்தான் மும்பை எஸ்பிளனேட் கோர்ட்டில் நீதிபதி முன்பு கஸாப் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

இதற்கிடையே, மும்பை தாக்குதல் விசாரணை தொடர்பாக அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் கேட்கும் தகவல்களுக்கு இந்தியா பதிலளிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பை வழக்கு தொடர்பாக கூட்டு விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை. பாகிஸ்தானுக்கு தேவைப்படும் வகையில் இந்தியா ஒத்துழைப்பு அளிக்கும்.

பாகிஸ்தானிடமிருந்து எந்த கேள்விகள், தகவல்கள் கோரி விண்ணப்பங்கள் வந்தால் அவற்றுக்கு நாங்கள் பதிலளிப்போம். ஆனால் அவை உரிய முறையி்ல் வர வேண்டும். மீடியாக்களில் வரும் கேள்விகளுக்கு எங்களால் பதிலளிக்க முடியாது என்றார்.

மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் அரசு 30 கேள்விகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்த கேள்விக்கு பிரணாப் முகர்ஜி இவ்வாறு பதிலளித்தார்.

30 கேள்விகள்....

இந்த நிலையில் 30 கேள்விகள் அடங்கிய பாகிஸ்தானின் பட்டியல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

இந்த கேள்விகளில் கஸாப்பை வழி நடத்திய தீவிரவாதிகளின் குரல் பதிவுகள் உள்ளிட்டவற்றை தங்களுக்குத் தர வேண்டும் என பாகிஸ்தான் கோரியுள்ளது.

இதுதவிர மேலும் பல தொழில்நுட்ப தகவல்களையும் பாகிஸ்தான் கோரியுள்ளது. அபு ஹம்சா, காபா ஆகியோரின் பேச்சுப் பதிவுகளையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் கேட்டுள்ளது.

இதுதவிர பாகிஸ்தான் கோரியுள்ள பிற தகவல்கள் விவரம்:

- மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்ட பத்து தீவிரவாதிகளின் கைரேகைகள், டிஎன்ஏ விவரங்கள், பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை தர வேண்டும்.

- லஷ்கர் இ தொய்பாவின் ஜாகியுர் ரஹ்மான் லக்வியை கஸாப் அடையாளம் காண காட்டப்பட்ட புகைப்படம்.

- தீவிரவாதிகள் பயன்படுத்திய சாட்டிலைட் போன்களின் தடயவியல் சோதனை ஆய்வு முடிவுகள், அதுதொடர்பான புகைப்படங்கள், அந்த போன்களில் பதிவாகியிருந்த எண்கள் விவரம்.

- கஸாப்பின் விசாரணை அறிக்கைகள், வாக்குமூல அறிக்கைகள், தீவிரவாதிகளுக்கு சிம் கார்டுகளைக் கொடுத்த இரு இந்தியர்கள் குறித்த விவரம்.

- இந்தியா வழங்கிய சில ஜிபிஎஸ் டேட்டாக்களில் உரிய தேதிகள் உள்ளிட்டவை இல்லை. எனவே இதை நம்ப முடியாது.

- மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகள் பயன்படுத்திய போன்களுக்கான சிம் கார்டுகளை வழங்கிய இரு இந்தியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள்.

இத்தகைய விவரங்களை கேள்விகளாக கேட்டுள்ளது பாகிஸ்தான்.

பிப்ரவரி 12ம் தேதி இந்த விவரங்கள் அடங்கிய கேள்விகளை இந்தியாவிடம் பாகிஸ்தான் அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+