மார்ச் 5க்குள் வேட்பாளர் பட்டியல்-சோனியா உத்தரவு
டெல்லி: நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் பட்டியலை வரும் மார்ச் 5ம் தேதிக்குள் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும் சோனியா காந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்களவைக்கு 5 முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மத்திய உள்துறைச் செயலாளருடன் தலைமைத் தேர்தல் ஆணையர் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
இதையடு்த்து தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து கூட்டணிகளை முடிவு செய்யும் பணியிலும், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியிலும் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன.
பாஜக சில தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அக் கட்சியின் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டனர்.
இந் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு மற்றும் மாநில கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பணிகளை சோனியா முடுக்கி விட்டுள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் பொறுப்பாளர்களை நியமித்துவிட்ட சோனியா, அவர்கள் மூலமாக கூட்டணி குறித்துப் பேசி வருகிறார். இந்த வகையில் தான் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் நேற்று திமுக எம்பி தயாநிதி மாறனுடன் டெல்லியில் பேச்சு நடத்தினார். அதில் இடப் பகிர்வு குறித்தும், பாமக குறித்தும் விரிவாக பேசப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கூட்டத்தையும் சோனியா கூட்டி விவாதித்தார். இதையடுத்து காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் மாநிலங்களில் வேட்பாளர்கள் பட்டியலை உடனடியாக தயாரிக்குமாறு மாநிலத் தலைவர்களுக்கும், மாநில தேர்தல் பொறுப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அதே போல கூட்டணி அமைத்து போட்டியிடும் மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு வேட்பாளர் பட்டியலை தயாரிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பணிகளை மார்ச் 5ம் தேதிக்குள் முடித்து வேட்பாளர் பட்டியலை தயார் செய்துவிடுமாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மார்ச் 6ம்ந் தேதி காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் பணிக்குழு டெல்லியில் கூடவுள்ளது. அந்த கூட்டத்தில் மாநிலம் வாரியாக அனுப்பப்படும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து விவாதித்து இறுதி முடிவெடுக்கப்படும்.
அதன் பிறகு வேட்பாளர்கள் பெயர்களை சோனியா அறிவிப்பார்.
இதையடுத்து எம்பி சீட் பெறும் முயற்சிகளில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த முறை வேட்பாளர் தேர்வில் 30 சதவீதம் பேர் இளைஞர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரி வருவதால் காங்கிரஸ் இந்த முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications