டிஜிபி ஜெயின் உருவ பொம்மைக்கு தூக்கு - வக்கீல்கள் போராட்டம்
கரூர்: கரூர் நீதிமன்ற வளாகத்தில் தமிழக டிஜிபி ஜெயின் உருவ பொம்மைக்கு தூக்கு தண்டனை கொடுத்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உயர் நீதி மன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வரலாறு காணாத அளவில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
இதன் விளைவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷினர் மற்றும் போலீசாரை கண்டித்து தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் வழக்கறிஞர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களையும், நீதி மன்ற புறக்கணிப்பையும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் நீதி மன்ற வளாகத்தில் கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகையன் தலைமையில் பெண் வழக்கறிஞர்கள் உள்பட சுமார் 150 வழக்கறிஞர்கள் இன்று காலை திரண்டனர்.
அவர்கள் நீதி மன்ற வளாகத்தில் மரத்தடியில் மாதிரி நீதி மன்றம் அமைத்து வாதி, பிரதிவாதி கருத்துக்களை கேட்டறிந்தனர்.
புன்பு, தமிழக டிஜிபி உருவபொம்மையை கொண்டு வந்து அதை விசாரணை நடத்தினர்.
அப்போது ஒரு பெண் வழக்கறிஞர் டிஜிபி ஜெயின் மனைவியே வந்து மனு கொடுப்பது போல மாதிரி நீதி மன்ற நீதிபதியிடம் மனு கொடுத்தார்.
அந்த மனுவை மாதிரி நீதி மன்ற நீதிபதி முருகையன் நிராகரித்ததோடு, டிஜிபி ஜெயினுக்கு தூக்கு தண்டனை விதித்தார்.
இதனையடுத்து தயாராக வைத்திருந்த டிஜிபி ஜெயின் உருவ பொம்மைக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றினர்.
இந்த சம்பவம் காரணமாக கரூர் நீதி மன்ற வளாகத்தில் பதட்டம் காணப்பட்டது.
தகவல் அறிந்து போலீசார் வந்த போது அனைத்து சம்பவங்களும் நிறைவு பெற்றிருந்தது.
இந்த சம்பவத்தைப் படம் பிடித்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் கேமராமேனிடம் அதுகுறித்த வீடியோ பதிவை போலீஸார் கேட்டு வாங்கிச் சென்றுள்ளனர்.
நீதிமன்ற வளாகத்தில் டிஜிபி ஜெயின் உருவ பொம்மைக்கு தூக்குதண்டனை விதித்து போராட்டம் நடத்திய 150 வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து உயர் அதிகாரிகளிடம் போலீஸார் கேட்டுள்ளனர். அனுமதி கிடைத்தவுடன் வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
உருவபொம்மை எரிப்பு - 19 வக்கீல்கள் மீது வழக்கு
இதற்கிடையே, நெல்லையில் நேற்றுமுன்தினம் வக்கீல்கள் டிஜிபியின் உருவ பொம்மையை எரித்தனர்.
இதையடுத்து வக்கீல்கள் சங்க செயலாளர் சிவகுமார் மற்றும் சுப்புரத்தினம், அமல்ராஜ், பிரச்சன்னா, குற்றாலநாதன், கருணாநிதி, துரைமுத்துராஜ், பகத்சிங், வெயிலுமுத்து உள்ளிட்ட 19 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
காவல்துறைக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையிலான இந்த பகைமை மேலும் மேலும் முற்றி வருவதால் ஒருவித பரபரப்பு நிலை தமிழகம் முழுவதும் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications