திமுகவிலிருந்து வக்கீல் சங்கத் தலைவர் விலகல்
சென்னை: வழக்கறிஞர்கள்-போலீசார் மோதலில் மாநில அரசின் அணுகுமுறையை கண்டித்து திமுக வழக்கறிஞர்கள் அணியிலிருந்து விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து பால்கனகராஜ் அறிவித்துள்ளார்.
மேலும் திமுகவிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த மோதலையடுத்து வழக்கறிஞர்கள் தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பிலும் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசாரை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று கருப்பு தினம் அனுசரித்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அதேபோல தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
சென்னையில் உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்திருந்த வழக்கறிஞர்கள் வாயை கருப்புத் துணியால் மூடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மனுநீதிச் சோழன் சிலையின் கையில் கருப்புக் கொடியை வைத்தும், சிலையின் கண்களை கருப்புத் துணியால் மூடியும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் உயர் நீதிமன்றப் பணிகள் இன்றும் பாதிக்கப்பட்டன. அதேபோல எழும்பூர், ஜார்ஜ் டவுன், சைதாப்பேட்டை, ஆலந்தூர், பூந்தமல்லி உட்பட சென்னையின் பிற நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இந் நிலையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்தும் திமுக வழக்கறிஞர்கள் அணியிலிருந்தும் விலகுவதாக பால்கனகராஜ் அறிவித்துள்ளார்.
உண்ணாவிரதப் பந்தலில் பேசிய அவர், ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி 9 நாட்கள் ஆகி விட்டன. ஆனால் இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் திமுக வக்கீல் அணியில் இருந்து வருகிறேன். ஆனால் தாக்குதல் நடத்திய போலீசார் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காததை கண்டித்து நான் திமுக வக்கீல் அணியிலிருந்து விலகுகிறேன் என்றார்.
தாம்பரம் நீதிமன்றத்தில் கருப்பு கொடி:
இதற்கிடையே தாம்பரம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் கருப்புக் கொடி ஏற்றி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியரசு தினம், சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்றப்படும் இந்தக் கம்பத்தில் கருப்புக் கொடி பறப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வளாகங்களில் கருப்பு கொடியேற்ற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் போராட்டத்தை வழக்கறிஞர்கள் நடத்தி வருகின்றனர்.
நீதிபதி கிருஷ்ணா நாளை வருகிறார்
இதற்கிடையே, உயர்நீதிமன்றக் கலவரம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா நாளை சென்னை வருகிறார்.
நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த வகுப்புக் கலவரம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை சென்னை வரும் ஸ்ரீகிருஷ்ணா, முதலில் வன்முறை சம்பவம் நடந்த உயர்நீதிமன்ற வளாகத்தை பார்வையிடுகிறார். கட்டிட சேதங்களை ஆய்வு செய்வார்.
தீவைத்து எரிக்கப்பட்ட போலீஸ் நிலையத்தையும் பார்வையிடுவார். ஐகோர்ட்டு வளாகம் முழுக்க சுமார் 40 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அந்த வாகன சேதத்தையும் அவர் மதிப்பிடுவார்.
ஸ்ரீகிருஷ்ணா விசாரணைக்கு உதவி செய்ய சென்னை சி.பி.ஐ. கிளையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொடுப்பார்கள்.
வன்முறையில் பாதிக்கப் பட்டவர்களையும் நேரில் சந்தித்துப் பேச ஸ்ரீகிருஷ்ணா திட்டமிட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற வளாக வன்முறை வீடியோ பதிவுகளையும் ஸ்ரீகிருஷ்ணா பார்க்கவுள்ளார். இவற்றின் அடிப்படையில் அவர் 2 வாரத்துக்குள் இடைக்கால அறிக்கையைத் தயாரித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வார்.
உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் போலீசார் நுழைந்து தடியடி நடத்த அனுமதி கொடுத்த உயர் போலீஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஸ்ரீகிருஷ்ணா விசாரணைக்குழு பரிந்துரை செய்ய உள்ளது. அந்த பரிந்துரைப்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகள் பிறப்பிக்கும்.
இன்ஸ்பெக்டர் மீது குண்டு வீச்சு:
இந்நிலையில் உயர் நீதிமன்றம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மீது நேற்று மாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
பூக்கடை போலீஸ் நிலையத்தில் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் இவரது ஜீப் அருகே பெட்ரோல் குண்டு விழுந்து வெடித்தது.ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications