Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தான் கடற்படை தளபதியின் பல்டியோ பல்டி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு பிடிபட்டுள்ள தீவிரவாதி கஸாப், பாகிஸ்தானிலிருந்துதான் இந்திய கடற் பகுதிக்குள் நுழைந்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிய பாகிஸ்தான் கடற்படைத் தளபதி நோமன் பஷீர், தான் அப்படிக் கூறவில்லை என்று இப்போது பல்டி அடித்துள்ளார்.

மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் குறித்து பேட்டி அளித்திருந்த பாகிஸ்தான் கடற்படைத் தளபதி நோமன் பஷீர், மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் இந்திய கடற்படையின் தோல்வியாகும்.

தீவிரவாதி கஸாப் உள்ளிட்டோர் பாகிஸ்தான் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

கராச்சியிலிருந்துதான் தீவிரவாதிகள் வந்தார்கள் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அதுதொடர்பான சான்றுகளும் இல்லை. ஆனால் கராச்சியிலிருந்து அவர்கள் வந்தார்கள் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூற முடியாது என்று கூறினார் பஷீர்.

ஆனால் இந்த மாதத் தொடக்கத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறுகையில், பத்து தீவிரவாதிகளும், கராச்சியின் தட்டா கடற்கரைப் பகுதியிலிருந்து 3 படகுகள் மூலம் புறப்பட்டுச் சென்றனர் என்று விசாரணையில் தெரிய வந்திருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்தப் படகுகளையும், அவற்றின் ஊழியர்களையும் கூட பாகிஸ்தான் புலனாய்வுப் படையினர் கண்டுபிடித்தனர். மேலும், தீவிரவாதிகள் தங்கியிருந்த இரு வீடுகளும் கூட கண்டுபிடிக்கப்பட்டு அங்கு ரெய்டு நடத்தப்பட்டது என்பதும் நினைவிருக்கலாம்.

இதைத் தொடர்ந்துதான் எட்டு பாகிஸ்தானியர்கள் மீது பாகிஸ்தான் அரசு வழக்குப் பதிவு செய்தது. அவர்களில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு, தீவிரவாதத் தடுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலைமை இவ்வாறிருக்க கடற்படைத் தளபதி புதுக் கதை விட்டிருந்தார்.

ப.சிதம்பரம் மறுப்பு:

பஷீரின் இந்தப் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில்,

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி கூறியதையெல்லாம் நாளையே அவர்கள் மறுப்பார்கள். இதற்கெல்லாம் நாம் முக்கியத்துவம் தரத் தேவையில்லை.

ஆரம்பத்திலிருந்தே அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகத்தான் பேசி வருகிறார்கள். மும்பைத் தாக்குதல் தொடர்பாக நாம் பாகிஸ்தானுக்கு அளித்துள்ள ஆதாரங்கள் மறுக்கவே முடியாதவை.

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் கேட்டுள்ள கேள்விகளுக்கு அடுத்த வாரம் பதில் தரப்படும். பாகிஸ்தான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நாங்கள் பதிலை தயாரித்து வருகிறோம்.

இந்த கேள்விகளுக்கு ஏற்கனவே மும்பை தாக்குதல் தொடர்பாக மும்பை போலீசார் பொது ஆவணமாக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையிலேயே பதில் இருக்கிறது.

எனினும் பாகிஸ்தான் எழுப்பி இருக்கும் 30 கேள்விகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பதில்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

அந்த பதில்கள் திருப்தியளிக்கும் வகையில் இருக்கின்றனவா? என்பது பற்றி முடிவு செய்யப்பட்டவுடன் அடுத்த வாரம் பதில்கள் இறுதி செய்யப்படும். பின்னர் அந்த பதில்கள் வெளியுறவு அமைச்சகம் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக பாகிஸ்தானிடம் கொண்டு செல்லப்படும்.

பாகிஸ்தான் எழுப்பியுள்ள கேள்விகளைப் போல மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியாவும் சில தகவல்களை பாகிஸ்தானிடமிருந்து கேட்டுப் பெற விரும்புகிறது. அவையும் பாகிஸ்தான் கேட்ட பதில்களுடன் சேர்த்து அனுப்பி வைக்கப்படும்.

கூட்டு விசாரணை கிடையாது:

மும்பை சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானும், இந்தியாவும், தங்களது நாட்டின் நீதிவரையறைக்கு உட்பட்டு தனித்தனியாக விசாரணை நடத்தலாம்.

வங்கதேசத்தில் தற்போது நடந்து வரும் நிகழ்வுகள் அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம். இதை எந்த வகையிலும் நம்மை பாதிக்காது. வங்கதேச ரைபிள்ஸ் படையினர் இந்தியாவுக்குள் ஊடுறுவவில்லை. நமது எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன என்றார் சிதம்பரம்.

பல்டி அடித்த பஷீர்:

இந்த நிலையில், அரசுடன் முரண்படும் வகையில் தான் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை என்று பஷீர் பல்டி அடித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணை குறித்து கருத்து தெரிவிக்கவோ, பேசவோ கடற்படைக்கு எந்த அதிகாரமும் இல்லை.

இந்த வழக்கை நாங்கள் விசாரிக்கவில்லை. இதில் நேரடியாகவும் நாங்கள் ஈடுபடவில்லை. எனவே பாகிஸ்தான் அரசின் விசாரணையுடன் நான் முரண்பட விரும்பவில்லை. முரண்படவும் மாட்டேன்.

இதுகுறித்து விசாரிக்க வேண்டியது அரசின் வேலை.கஸாப் கராச்சியிலிருந்துதான் மும்பைக்குச் சென்றான் என்பதற்கான ஆதாரம் இருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் கூறியிருப்பது உண்மையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார் பஷீர்.

மொத்தத்தில் பாகிஸ்தான் தரப்பு, மும்பை சம்பவத்தை எந்த அளவுக்கு குழப்பி சீர்குலைக்க முடியுமோ அந்த அளவுக்கு செய்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+