போலீஸ் குடும்பத்தினர் உண்ணாவிரத முயற்சி-கைது
சென்னை: சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற போலீஸாரின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தை எரித்ததைக் கண்டித்தும், போலீஸார் மீதான தாக்குதலைக் கண்டித்தும் உதவி ஆணையர் அந்தோணிச்சாமி தலைமையில், இன்று காலை போலீஸ் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கில் திரண்டு அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தனர்.
அங்கு உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இணை ஆணையர் ரவிக்குமார் போலீஸாருடன் விரைந்து வந்தார். உண்ணாவிரதம் இருக்க முயன்றவர்களை சமாதானப்படுத்தினார். இருப்பினும் தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்ததால் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றினர்.
இருப்பினும் பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். போராட்டம் குறித்து அந்தோணிச்சாமி கூறுகையில், காவல் நிலையத்தை வக்கீல்கள் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த விசாரணை முடியும் வரை எந்தக் காவல்துறை அதிகாரி மீதும், காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications