தேர்தலில் முத்துலட்சுமியை நிறுத்த தீவிர முயற்சி!

முத்துலட்சுமிக்கு, மேட்டூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது.
கணவரின் மறைவுக்குப் பிறகும், இந்த மலைவாழ் மக்களுக்கு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உதவிகளைச் செய்து வருகிறார் முத்துலட்சுமி.
அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களை சந்தித்து அவர்களது குடும்பத்தினருக்கு உதவிகளை செய்து வந்தார்.
மேட்டூரில் அனாதை இல்லம் மற்றும் பள்ளி ஒன்றையும் துவங்க ஏற்பாடு செய்து வந்தார். வீரப்பன் சமாதி இருக்கும் இடத்தில் அவருக்கு நினைவு மண்டபம் மற்றும் வீரப்பன் நினைவு ஆதரவற்றோர் இல்லம் போன்றவற்றை அமைக்கவும் முயற்சி மேற்கொண்டிருந்தார்.
இந் நிலையில் பழைய வழக்குகள் சிலவற்றில் முத்துலட்சுமி ஆஜராகாததால் அவரை போலீசார் கைது செய்தனர். இப்போது அவரை மைசூர் சிறையில் அடைத்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார் முத்துலட்சுமி.
சிறையில் இருக்கும் முத்துலட்சுமியை அவரது தந்தை அய்யண்ணன் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து பார்த்து ஆறுதல் கூறி வருகின்றனர். மலைவாழ் மக்கள் பலரும் குடும்பத்துடன் சென்று அவரை சந்தித்து வருகின்றனர். இவர்களில் சிலர், முத்துலட்சுமி நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததுள்ளனர்.
முத்துலட்சுமிக்காக பலமுறை ஜாமீன் மனு போடப்பட்டது. ஆனால் இன்னமும் ஜாமீன் கிடைக்கவில்லை.
முத்துலட்சுமியின் இந்த முறை எப்படியும் ஜாமீனில் வெளியில் கொண்டு வந்துவிட முயற்சி மேற்கொண்டுள்ளனர் வக்கீல்கள். மேலும் உறவினர்களின் தொடர் வற்புறுத்தல் காரணமாக தேர்தலில் போட்டியிட முத்துலட்சுமியும் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து முத்துலட்சுமியின் அக்கா சின்னப்பொண்ணுவிடம் தட்ஸ்தமிழ் சார்பில் பேசினோம். அவர் கூறியதாவது:
முதல்ல முத்துலட்சுமி வெளில வரணும். அதுதான் முக்கியம். அதுக்காகத்தான் போராடிக்கிட்டு இருக்கோம். புருஷனை இழந்து தனியா போராடிக்கிட்டிருக்கிற ஒரு பொம்பளயை இன்னும் என்னெல்லாம் கொடுமைப்படுத்தப் போறாங்களோ...
சட்டப்படி ஒரு பெரிய பொறுப்புல இருந்தா அவங்களுக்கும் அவங்களைச் சுத்தியுள்ள மக்களுக்கு ஒரு பாதுகாப்பு இருக்கும் என்பதால் அவரை எப்படியாவது தேர்தலில் நிக்க வைச்சி ஜெயிக்க வைக்கணும்னு ஆசைப்படறாங்க.
இங்குள்ள மக்களும், மலை ஜாதிக்காரங்களும் பெரிதும் விருப்பப்படறாங்க. எதுவா இருந்தாலும் முத்துலட்சுமி விருப்பப்படிதான் நடக்கும். சில அரசியல் கட்சிக்காரங்களும் வந்து போறாங்க. ஆனா நாங்க எதுக்கும் பிடி கொடுக்கல. முதல்ல ஜாமீன்ல வெளிய வரணும். அதுக்கப்புறம்தான் எதுவா இருந்தாலும் பேச முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications