1,2,3... தெரியாத தமிழக மாணவர்கள்- ஒரு அதிர்ச்சி சர்வே
சென்னை: தமிழ்நாட்டில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களில் 37.4 சதவீத பேருக்கு ஒன்று முதல் 9 வரையிலான எண்களை கூட சரியாக அடையாளம் கண்டுகொள்ள தெரியவில்லை. ஆரம்ப கல்வியில் தமிழகம் பின் தங்க ஆரம்பித்துள்ளது என அதிர்ச்சி தருகிறது தேசிய அளவிலான சர்வே ஒன்று.
மும்பையில் 1994ம் ஆண்டு இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக அமைக்கப்பட்ட பிரதம் அமைப்பு தற்போது 21 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் ஆண்டு தோறும் இந்தியாவில் ஆரம்ப கல்வி தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் இந்தியா முழுவதும் 564 மாவட்டங்களில் 16,198 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அமைப்பு தமிழ்நாட்டில் 'கல்வி' என்ற அமைப்புடன் இணைந்து ஆய்வு செய்தது. இதன் முடிவுகளை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, சென்னையில் நேற்று வெளியிட்டார்.
ஆய்வு அறிக்கையில்,
தமிழகத்தில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் எளிய வார்த்தைகளை வாசிக்கத் தெரிந்த மாணவர்கள் 54.7 சதவீதம். கடந்த 2006- ம் ஆண்டில் 63.1 சதவீதமாக இருந்த இது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. இந்த வரிசையில் தமிழகம் தேசிய அளவில் கடைசி இடம் பிடித்திருப்பதாக தெரிகிறது. பின்தங்கிய மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட நல்ல முன்னேற்றம் பெறத் துவங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களில் 62.6 சதவீத மாணவர்கள் மட்டுமே 1 முதல் 9 வரையுள்ள எண்களை சரியாக அடையாளம் கண்டுபிடித்துள்ளார்கள். மற்ற மாணவர்கள் அதாவது மூன்றில் ஒரு பங்கிற்கு மேலான தமிழ் மாணவர்களால் எண்களை கூட சரியாக அடையாளம் காணமுடியவில்லை. மற்ற 15 மாநிலங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் எண்களை சரியாக கண்டறிந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் ஒன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தை கூட வாசிக்கத் தெரியாமல் இருப்பவர்கள் 54.3 சதவீதம் பேர். ஆனால், தேசிய அளவில் இது 33.4 ஆக இருக்கிறது.
மூன்றாம் முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் எளிய கழித்தல் கணக்கு சரியாக செய்வதர்கள் 36.3 சதவீதம் தான். மற்ற 63.7 சதவீதம் பேர் தப்பு கணக்கு போட்டுள்ளனர். இந்த விஷயத்தில் புதுச்சேரி மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களை விட மோசமாக உள்ளனர். அவர்களில் 29.3 சதவீதம் மட்டுமே சரியாக கணக்கிட்டுள்ளனர்.
தமிழகம் இரண்டாமிடம்
தேசிய அளவில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை கேரளாவுக்கு அடுத்து தமிழ்நாட்டில் தான் அதிகம் உள்ளது. கேரளாவில் 99.8, தமிழகத்தில் 99.4 சதவீத குழந்தைகள் ஆரம்ப கல்விக்கு செல்கின்றனர் என அந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வசந்திதேவி கூறுகையில்,
தமிழ்நாடு கல்வியில் முன்னேறி வருவதாக அரசு தெரிவித்துள்ளதில் உண்மை இல்லை என்பது இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மாணவர்களின் கல்வித் தரம் குறித்து மாநில அரசுக்கும், கிராமப்புற மக்களுக்கும் அக்கறை வரவேண்டும். குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி, ஆசிரியர்களுக்கு போதிய சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றார் வசந்திதேவி.












Click it and Unblock the Notifications