கூட்டணியில் வி.சிறுத்தைகளுக்கு இடமில்லை-காங்
சென்னை: காங்கிரசை எதிர்க்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருக்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
திமுக அமைத்துள்ள தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் ஆகியோர் அடங்கிய குழு நாளை பேச்சு நடத்தவுள்ளது.
இந் நிலையில் இன்று இந்தக் காங்கிரஸ் குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு தங்கபாலு அளித்த பேட்டி:
கேள்வி:விடுதலை சிறுத்தைகள் உங்கள் கூட்டணியில் இடம் பெறுமா?
பதில்: காங்கிரசை எதிர்ப்பவர்களும், காங்கிரஸ் தலைவர்கள், கொடியை எரிப்பவர்களும், காங்கிரசுக்கு எதிரானவர்களும் எங்கள் கூட்டணியில் இடம்பெற முடியாது.
கேள்வி: தொகுதி பங்கீடு எப்போது முடியும்?
பதில்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்திய பிறகு தெரியும்.
கேள்வி: இலங்கை பிரச்சினையை ஜெயலலிதா திடீரென கையில் எடுத்திருக்கிறாரே?
பதில்: இலங்கை பிரச்சனையை அரசியல் ஆக்குபவர்கள் தேர்தலில் வெற்றி பெற முடியாது. இலங்கை பிரச்சினை வேறு, இந்திய அரசியல் வேறு.
கேள்வி: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரசார் திடீர் என்று போராட்டத்தில் குதித்துள்ளார்களே?
பதில்: ஸ்ரீபெரும்புதூரில் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி உயிர்த் தியாகம் செய்தார். எனவே அந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் உணர்வை மதிக்கிறோம். காங்கிரஸ் கட்சி இதை பரீசிலிக்கும் என்றார்.
விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் தொடரச் செய்ய திமுக விரும்பும் நிலையில் அந்தக் கட்சி கூட்டணியில் இடம் பெற முடியாது என தங்கபாலு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இந்த விஷயத்தில் திமுக, காங்கிரஸ் இடையே மோதல் வெடிக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications