ஆயுத கும்பலை விரட்டிய தமிழர்கள்; கற்பழிப்பிலிருந்து தப்பிய பெண்கள்!
மன்னார்: மன்னார் மாவட்டத்தில் அதிகாலையில் வீடு புகுந்து தமிழ்ப் பெண்களை கற்பழிக்க முயன்ற ஆயுதம் தாங்கிய ராணுவ கும்பலை, அக்கம் பக்கத்து தமிழர்கள் ஒன்று திரண்டு அடித்து விரட்டினர்.
மன்னார் மாவட்டம் பேசாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அந்த குறிப்பிட்ட வீட்டில் அதிகாலை வேளையில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் வீட்டை சோதனையிட வேண்டும், கதவைத் திறங்கள் என்று கூறியுள்ளனர்.
அப்போது அந்த வீட்டில், தாய், தந்தை, இரு பெண் குழந்தைகள், இரு மகன்கள் இருந்தனர். ஆயுதம் தாங்கிய கும்பல் பாலியல் வன்முறைக்காகவே வந்துள்ளதை உணர்ந்த வீட்டினர் கதவைத் திறக்காமல், அபயக் குரல் எழுப்பினர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். ஆனால் ஆயுதம் தாங்கிய கும்பல், அவர்களை துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டியது. இதையடுத்து அவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
இதைத் தொடர்ந்து பின்னர் மீண்டும் கதவைத் தட்டியுள்ளனர். அதிகாலை 4 மணியானபோது வீட்டின் கதவை உள்ளே இருந்தவர்கள் திறந்துள்ளனர். இதையடுத்து உள்ளே புகுந்த கும்பல் ஆண்கள் அனைவரையும் ஒரு அறையில் வைத்துப் பூட்டியது.
பின்னர் பெண்களிடம் அவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்றனர். இதைப் பார்த்து வீட்டிலிருந்தவர்கள் அபயக் குரல் எழுப்பினர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பெரும் கூட்டமாகத் திரண்டு ஆவேசத்துடன் கைக்கு கிடைத்த இரும்புத் தடிகள் உள்ளிட்ட பொருட்களுடன் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர்.
இதையடுத்து ஆயுதம் தாங்கிய கும்பல் தப்பி ஓடியுள்ளது. பெரும் கூட்டமாக மக்கள் வரவே அவர்களுக்குத் துணையாக வந்த ராணுவப் படையினரும் பயந்து போய் திரும்பி ஓடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications