சரத்-யெச்சூரி சந்திப்பு:பிகார் கூட்டணி 'பணால்'?-பீதியில் பாஜக

சரத் யாதவின் வீட்டில் நடந்த சந்திப்பையடுத்து ஐக்கிய ஜனதா தளமும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிவிடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பிகாரில் ஐக்கிய ஜனதா தளமும் பாஜகவும் இணைந்து தான் கூட்டணி ஆட்சியை நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான நிதீஷ் குமார் முதல்வராக உள்ளார்.
சமீபத்தில் ஒரிஸ்ஸாவில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி நடத்தி வந்த பிஜூ ஜனதா தளம் கூட்டணியை முறித்துக் கொண்டது. இதையடுத்து முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்த யெச்சூரி அவரை மூன்றாவது அணிக்குக் கொண்டு வந்தார்.
இந் நிலையில் பிகாரிலும் அதே போல நடந்து விடுமோ என்ற பீதியில் பாஜக ஆழ்ந்துள்ளது.
பிகாரில் மொத்தமுள்ள 40 லோக்சபா தொகுதிகளில் முதலில் 20 இடங்களை பாஜக கோரியது. ஆனால், வெறும் 8 இடங்கள் மட்டுமே தர முடியும் என சரத் யாதவும், நிதிஷ் குமாரும் கூறிவிட்டனர்.
இதையடுத்து கொஞ்சம் குரலை உயர்த்திப் பார்த்தது பாஜக. இதைத் தொடர்ந்து கூட்டணியே வேண்டாம் என்று அறிவித்து அதிர்ச்சி தந்தார் சரத் யாதவ்.
இதைத் தொடர்ந்து 15 இடமாவது கொடுங்கள் என்று இறங்கி வந்துள்ளது பாஜக. ஆனால், அதிகபட்சம் 10 தொகுதிகள் என்ற நிலையில் உள்ளனர் யாதவும் குமாரும்.
இதை பாஜக தலைவர்கள் ஏற்க மறுத்து வருவதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் நிலவுகிறது.
இந் நிலையில் தான் சரத் யாதவை சந்தித்துள்ளார் யெச்சூரி. தனித்து நின்றாலே பிகாரில் பெரும்பாலான இடங்களை உங்களால் வெல்ல முடியும், எனவே பாஜக உறவை முறித்துக் கொள்ளுங்கள், எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள் என்று யாதவிடம் யெச்சூரி வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
இதனால் பாஜக பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளது. தென்னகத்தில் கர்நாடகம் தவிர வேறு எங்கும் வெற்றி வாய்ப்பு இல்லாத நிலையில் உத்தரப் பிரதேசத்திலும் பிகாரிலும் அதிக இடங்களில் வெல்லாவிட்டால் பிரதமர் பதவி என்பது அத்வானிக்கு கனவாகவே போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், உத்தரப் பிரதேசத்தில் மூன்றாவது இடத்துக்குத் தான் பாஜக (முலாயம் கூட்டணி இல்லாவிட்டால் காங்கிரஸ் நிலைமை அதைவிட மோசம்) போட்டியிட வேண்டிய நிலை.
ஒரிஸ்ஸாவில் கூட்டணி கைவிட்டுப் போய்விட்டதாலும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி கழன்று கொண்டதாலும் தமிழகத்தில் ஜெயலலிதா ஏமாற்றிவிட்டதாலும் இப்போதைக்கு குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், சட்டீஸ்கர், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களைத் தான் பாஜக நம்பி்க் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் பிகாரில் எப்படியாவது கூட்டணியைக் காப்பாற்றிக் கொள்ள தீவிரம் காட்டி வரும் பாஜக, 10 இடங்களுக்குக் கூட ஒப்புக் கொள்ளும் என்றே தெரிகிறது.
ஆனால், இந்தக் கூட்டணி வந்தாலும் தேர்தலுக்குப் பின் நிதிஷ்குமாரும் சரத் யாதவும் என்ன நிலையை எடுப்பார்களோ என்ற கவலை பாஜகவை வாட்ட ஆரம்பித்துவிட்டது.
ஏற்கனவே தனது கூட்டணியில் உள்ள சிவசேனை சரத் பவார் தான் பிரதமர் என்று கூறி அத்வானியின் பிரதமர் கனவில் கையை வைத்துவிட்டது. இப்போது தனது கூட்டணியில் உள்ள இன்னொரு கட்சியான ஐக்கிய ஜனதா தளம் இடதுசாரிகளுடன் பேச ஆரம்பித்துவிட்டது பாஜக தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.












Click it and Unblock the Notifications