கோவை-பட்டா தராவிட்டால் தேர்தல் புறக்கணி்ப்பு
கோவை: கோயம்புத்தூர் அம்மன்குளம் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோயம்புத்தூர் அருகே உள்ள அம்மன்குளம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள், தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழக அரசிடமும் பல முறை கோரிக்கை வைத்தனர். ஆனால், உரிய பலன் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து பல்வேறு போரட்டங்களை நடத்தினர்.
போராட்ட நேரத்தில் இவர்களை சமாதானம் செய்ய வரும் அரசு அதிகாரிகள் பட்டா தருவதாக கூறி செல்வார்களாம். ஆனால் ஒருவரும் அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை என மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சேரிப் பகுதி மக்களுக்காக, ஜவகர்லால் நேரு நகர்ப்புறச் சீரமைப்புத் திட்டத்தின்படி கோவை மாநகராட்சி, பல்லடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டி வருகிறது. அந்த திட்டத்தில் இந்த பகுதியைச் சேர்ந்த பட்டா இல்லாத குடுபத்தினரை பயனாளிகளாக சேர்க்க வலிறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்காவிட்டால், வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
இந்த கோரிக்கையை முன்வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதி மக்கள் தங்களது வீட்டின் மீது கறுப்புக் கொடியை கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications