ராஜபக்சே அழைப்பு-தமிழர் கட்சி நிராகரிப்பு

இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கண்டு கொள்ளாமல் இருந்து வந்த ராஜபக்சே சமீபத்தில் பேச்சுவார்த்தைக்கு அதை அழைத்திருந்தார். ஆனால் இதை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்து விட்டது.
இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லைத்தீவில் ஒவ்வொரு நாளும் 50-60 மக்கள் கொல்லப்படுகின்றனர். சராசரி 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைகின்றனர்.
முல்லைத்தீவில் ஒவ்வொரு நாளும் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி அதுவும் அரசாங்கம் அறிவித்த 'மக்கள் பாதுகாப்பு வலய'ங்களை நோக்கி எறிகனை, பீரங்கித் தாக்குதல்களும் வான் தாக்குதல்களும் சிறிலங்கா படைகளால் நடத்தப்படுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் படையினரால் கைப்பற்றப்பட்டதாக அரசாங்கம் அறிவித்த பிரதேசங்களில் கூட உணவுகள், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகின்றது.
என்னென்ன வழிமுறைகள் உண்டோ அவை அனைத்தையும் பயன்படுத்தி மக்களை அரசாங்கம் கஷ்டத்திற்கு உள்ளாக்குகின்றது.
இந்த நிலையில் அதுவும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் குறித்து பேச வருமாறு அரச ராஜபக்சே அழைப்பு விடுத்திருக்கின்றார். அவர் விடுத்த அந்த நச்சுத்தனமான அழைப்பை ஏற்று அந்த நஞ்சை விழுங்குவதற்கு நாங்கள் குழந்தைப் பிள்ளைகள் அல்ல.
முதலில் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதன் பின்னர் தான் அரசியல் விஷயங்கள் குறித்து பேசலாம் அதுதான் எமது நிலைப்பாட்டு. அதற்கு நாங்கள் தயார். ஆனால் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற விஷயங்களுக்கு அரச தலைவர் சாதகமான பதிலளித்தால் நாங்கள் பேசுவோம் அதில் பிரச்சினை எதுவும் இல்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன்னரே தமிழ்மக்களுக்கு எதிரான வன்முறைகள் அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்டன.
தமிழர்கள் நடத்திய அகிம்சை போராட்டங்கள் கூட வன்முறைகளால் தடுக்கப்பட்டன. இனப்பிரச்சினைத் தீர்விற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகள், ஒப்பந்தங்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் கைவிடப்பட்டன. இதன் பின்னணியிலேதான் விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாகியது என்றார்.












Click it and Unblock the Notifications