கேரளாவில் புலிகள் ஊடுருவல்!-டிஐஜி மறுப்பு!!
கொச்சி: கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள ஒரு கடற்கரை கிராமத்துக்கு படகில் விடுதலைப் புலிகள் வந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, ஆலப்புழை - கொச்சி இடையே கடற்கரை முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் பள்ளிப்புரம் கடற்கரை பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பின் சீருடை அணிந்து நேற்று மதியம் 15 பேர் வந்துள்ளனர்.
இதையடுத்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆலப்புழை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த செய்தி கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடற்படை தளமான கொச்சியை விடுதலைப்புலிகள் தாக்க கூடும் என்று மத்திய உளவுத் துறை இலாகாவும் கேரள போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து ஆலப்புழையில் இருந்து கொச்சி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு பின்னரே அனுப்பப்பட்டன. போலீசாருடன் இணைந்து கமாண்டோ படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இது தவிர, கேரள கடற்கரை முழுவதும் கடற்படையினர் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளன.
இதற்கிடையே அருகிலிருந்த செர்தாலா பகுதியில் சிலர் சென்று உடைகள் தருமாறு கேட்டதாகவும், அவர்கள் தமிழில் சரளமாக பேசி கொண்டதாகவும் மக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், கேரள கடற்கரையில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன. விடுதலைப்புலிகள் ஊடுருவுவதற்கான சாத்தியம் உள்ள அனைத்து பாதைகளுமே தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றார்.
டிஐஜி மறுப்பு...
இது குறித்து போலீஸ் டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் இதை மறத்துள்ளார். அவர் கூறுகையில், அந்த படகையும் அதில் வந்தவர்களையும் பிடித்து விசாரித்துவிட்டோம். அவர்கள் கேரளாவை சேர்ந்த மீனவர்கள் தான். கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு நீண்ட நாள் கழித்து வீடு திரும்பியுள்ளனர்.
அவர்கள் படகு என்ஜினை மூடும் துணி, மீன் வலை மற்றும் மண்ணெண்ணை கேன் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளனர். என்ஜினை மூடும் துணியை போர்த்தி இருந்தவரை பார்த்து மக்கள் விடுதலை புலி என நினைத்து விட்டனர். நான் அவர்களுக்கு வீட்டு சென்று இதை உறுதி செய்து கொண்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications