வருமான வரி விலக்கு ரூ2.5 லட்சமாக உயர்த்தப்படும்-திமுக

மக்களவைத் தேர்தலுக்கான 51 பக்க தேர்தல் அறிக்கையை திமுக நேற்று வெளியிட்டது.
அதில், அரசு ஊழியர்கள், மாத ஊதியம் பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கான ஆண்டு வருமான வரி விலக்கு வரம்பு இப்போது ரூ. 1.50 லட்சமாக உள்ளது.
ஒவ்வொரு பொது பட்ஜெட்டின் போதும் வருமான வரி விலக்குக்கான வரம்பு உயர்த்தப்படுகிறதா என்பதே நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எங்கள் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2.50 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலையிழந்தால் உதவித் தொகை:
தற்போது பொருளாதார தேக்க நிலையால் வேலை வாய்ப்பை இழக்கும் தொழிலாளர்களுக்கு 6 மாதங்களுக்கு உதவித் தொகை அளிக்க தனி நிதியத்தை மத்திய அரசு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவ உயர் பட்டப் படிப்புகளில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையில் மற்ற மாநில மாணவர்கள் பெற்று வருகின்றனர். இதை ரத்து செய்து 100 சதவீத இடங்களை அந்தந்த மாநிலங்களுக்கே அளிக்க வலியுறுத்தப்படும்.
மத்திய அரசின் ஒட்டுமொத்த வரி வருவாயில் 60 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க திமுக வலியுறுத்தும்.
திண்டுக்கல்லிலிருந்து போடிநாயக்கனூர் வழியாக குமுளி, திருவண்ணாமலையிலிருந்து ஜோலார்பேட்டை, நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி வழியாக பட்டுக்கோட்டை, மொரப்பூரிலிருந்து தருமபுரி, அரியலூரிலிருந்து திருவையாறு வழியாக தஞ்சாவூர் ஆகிய புதிய வழித்தடங்களில் அகல ரயில் பாதைகளை உருவாக்க வலியுறுத்தப்படும்.
ஐசிஎப் ஆலையின் இரண்டாவது கட்டத்தை தமிழகத்தில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குளச்சல் துறைமுகத்தை சரக்குப் பெட்டக முனையமாக மேம்படுத்த மத்திய அரசை வலியுறுத்தும்.
அகில இந்திய அளவில் சுயமரியாதை திருமணச் சட்டத்தை அங்கீகரிக்க திமுக வலியுறுத்தும்.
தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தவும் சேலம், தஞ்சாவூர், வேலூர், ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் உள்ள சிறிய ராணுவ விமான தளங்களை பயணிகள் விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் பெரும்பாலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் நடத்தப்படுகின்றன. இந்திய ஆட்சி மொழிகளில் சேர்க்கப்பட்டுள்ள சில மாநில மொழிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளில் பதிலளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மட்டுமின்றி பிற மாநில மொழி பேசும் மக்கள் பயனடையும் வகையில் அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் நேர்காணல் தேர்வும் பிராந்திய மொழியில் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹிந்தி மொழியை விரும்பாத மாநிலங்கள் மீது ஹிந்தி திணிப்பைத் தடுப்தற்கும், ஹிந்தி பேசாத மக்கள் விரும்புகிற காலம் வரை மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்று ஜவாஹர்லால் நேரு அளித்த உறுதி மொழி தொடர்ந்து காப்பாற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications