ராகுலுக்கு ரூ.23 லட்சம் கடன் - சொத்து ரூ 2.25 கோடி - சொந்தமாக கார் இல்லை!

உத்தர பிரேதம் மாநிலம் அமேதி தொகுதி நேரு குடும்பத்தின் சொந்த தொகுதி என்று சொல்லலாம்.
இந்த தொகுதியில் தான் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கடந்த 2004ல் இங்கு போட்டியிட்ட ராகுல் 2 லட்சத்து 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தற்போது அவர் இங்கு இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வரும் 23ம் தேதி நடக்கும் இரண்டாவது கட்ட தேர்தலின் போது ஓட்டுபதிவு நடக்கிறது.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ராகுல்காந்தி, நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து வந்தார். நேற்று காலை அவர் முசாபிர்கானா என்ற இடத்தில் இருந்து தனது தாயார் சோனியாவுடன் திறந்த ஜீப் காரில் சுல்தான்பூருக்கு ஊர்வலமாக சென்றார்.
வழி எங்கிலும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ராகுல் காந்தி பகல் 12.20 மணிக்கு சுல்தான்பூர் போய் சேர்ந்தனர். அங்கு மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ண சிங்கிடம் தனது வேட்புமனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்தார்.
ரூ. 2.25 கோடி சொத்து..
கடந்த 2004ல் வேட்புமனு தாக்கல் செய்த போது, அவர் தனக்கு ரூ.62 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள சொத்து இருப்பதாக தெரிவித்து இருந்தார். தற்போது அதைவிட சுமார் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் அதிகமாக, அதாவது ரூ. 2 கோடியே 33 லட்சம் சொத்து இருப்பதாக ராகுல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 2 கடைகள் ..
எனக்கு சொந்தமாக மெக்ராலியில் பண்ணை வீடு உள்ளது. இதன் மதிப்பு ரூ. 9 லட்சத்து 86 ஆயிரம். டெல்லி ஷாகத் பகுதி வணிக வளாகம் ஒன்றில் 2 கடைகள் உள்ளன. அவற்றின் சொத்து மதிப்பு ரூ. 1 கோடியை 63 லட்சத்து 80 ஆயிரம்.
அரியானா மாநிலம் மவுசா ஹாசன்பூர் என்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தின் மதிப்பு ரூ.28 லட்சத்து 22 ஆயிரம்.
டெல்லியில் இருக்கும் மூன்று வங்கிகளில் ரூ.10 லட்சத்து 92 ஆயிரம் இருப்பு தொகையும், ரொக்க பணமாக ரூ.70 ஆயிரமும் உள்ளது. எல்ஐசி மற்றும் என்சிஎஸ்சில் ரூ.10 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள சேமிப்பு பத்திரங்களும், ரூ.11/2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும் உள்ளன.
ரூ. 23.25 லட்சம் வங்கிக் கடன் பாக்கி..
எச்டிஎப்சி வங்கியில் ரூ.70 லட்சம் கடன் வாங்கி உள்ளேன். அதில் இன்னும் ரூ.23 லட்சத்து 25 ஆயிரம் பாக்கி செலுத்த வேண்டி உள்ளது.
இந்த ஆண்டு நான் வருமான வரியாக 11 லட்சத்து 20 ஆயிரத்து 880 ரூபாயும், சேவை வரியாக 5 லட்சத்து 32 ஆயிரத்து 596 ரூபாயும் செலுத்தி உள்ளேன் என வேட்புமனுவில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பிரியங்கா வரவில்லை...
இதன் பின்னர் தனது தாயார் சோனியாவிடம், ராகுல் ஆசிர்வாதம் வாங்கி கொண்டார். ராகுலுடன் மனு தாக்குதல் நிகழ்ச்சிக்கு தனது கணவர் ராபர்ட் வதேராவுடன் வர திட்டமிருந்த பிரியங்கா தனது மாமனார் ராஜேந்திர வதேரா தற்கொலை செய்து கொண்டதால் வரவில்லை.












Click it and Unblock the Notifications