விபத்து-தேர்தல் பணிக்கு சென்ற 5 அதிமுகவினர் பலி
ஈரோடு: அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா சேலத்துக்கு பிரச்சாரம் செய்ய வருவதை அடுத்து அங்கு மேடை அமைப்பது போன்ற ஏற்பாடுகளை கவனித்துவிட்டு ஈரோடு திரும்பி கொண்டிருந்த அதிமுகவினர் 5 பேர் விபத்தில் சிக்கி பலியானார்கள்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கட்சி பொது செயலாளர் ஜெயலலிதா வரும் 18ம் தேதி பிரச்சாரத்தை துவக்குகிறார். வரும் 25ம் தேதி அவர் சேலத்தில் பிரச்சாரம் செய்து, பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதையடுத்து பொதுகூட்டத்துக்கான பணிகள் அங்கு சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
மேடை அமைப்பது, ஹெலிகாப்டர் தளத்தை சோதனையிடுவது போன்ற பணிகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று பார்வையிட்டார்.
முன்னாள் எம்எல்ஏ மகன்...
அவருடன் ஈரோடு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கத்தின் மகன் ரமேஷ், ஈரோடு வீரப்பன்சத்திரம் நகரசபை துணை தலைவர் சிதம்பரம், ஆடிட்டர் நமச்சிவாயம், முன்னாள் வீட்டுவசதி சங்க தலைவர் கருப்பணன், அவரது மகன் ரவீந்திரகுமார் ஆகிய ஐந்து பேரும் பணிகளை மேற்பார்வையிட்டனர்.
பின்னர் அவர்கள் ஐந்து பேரும் இரவு தாமதமாக ஒரே காரில் ஈரோடு திரும்பினர். ரவீந்திரகுமார் காரை ஓட்டிவந்துள்ளார். இந்நிலையில் கார் காலை 1.15 மணிக்கு ஈரோடு அருகில் இருக்கும் பள்ளிப்பாளையம் பக்கத்தில் உள்ள ஒரு வளைவில் திரும்பும் போது பழினியிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது.
அதிவேகத்தில் மோதியதில் கார் அப்பளமாக நொறுங்கி போனது. இதில் காரில் பயணித்த அனைவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். பஸ்சில் வந்த 10 போருக்கு காயம் ஏற்பட்டது.
இறந்த அதிமுகவினரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்த அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட அதிமுகவினர் மருத்துவமனைக்கு சென்று அவர்களது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications