For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேது ரத்து, நாடு முழுவதும் அன்னதானம், ஈழ மாநிலம்-அதிமுக தேர்தல் அறிக்கை

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha with Leaders
சென்னை: இலங்கையில் இனப்படுகொலையை நிறுத்தி, அமைதி திரும்ப பாடுபடுவோம். அது முடியாவிட்டால் தனி ஈழ மாநிலம் அமைய பாடுபடுவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 5 நாட்கள் பணிபுரிவோருக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான 25 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ பருப்பு வகைகள், 1 கிலோ சமையல் எண்ணெய், 5 லிட்டர் மண்ணெண்ணெய் கொண்ட தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை தீவுத் திடலில் நடந்த அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டார்.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்...

- பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்கு சமமாக தமிழ் மக்கள் நடத்தப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும்.

-இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்படவும், அப்பாவி தமிழ் மக்களின் இனப் படுகொலையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முயற்சி தோல்வி அடைந்தால் தனிஈழ மாநிலம் அமைக்க வலியுறுத்துவோம்.

- அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ் பகுதிகளை புதுப்பிக்கவும், மேம்படுத்தவும், இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

- தமிழ் உட்பட எட்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ள நாட்டின் அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அறிவிக்கவும், அத்துடன் நேரு அளித்துள்ள உறுதிப்படி, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை மாற்று மொழியாக ஆங்கிலம் நீடிக்கவும் வழி வகை செய்யத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டுவரும்படி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள அரசிடம் அ.தி.மு.க. வலியுறுத்தும்.

- மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.

- கற்பழித்தல் குற்றம் புரிபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

சேதுவை ரத்து செய்வோம்..

- இன்றைய திட்டத்தின்படி சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்காக பாறாங்கற்களால் அமைக்கப்பட்ட ராமர் பாலம் இடிக்கப்படும் நிலை உருவாகும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இப்போது திட்டமிட்டுள்ளபடி இந்தக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படுவதால், நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு எந்தப் பொருளாதார ஆதாயமும் கிடைக்க வாய்ப்பே இல்லை. எனவே, இந்தத் திட்டத்தை அதிமுக ரத்து செய்யும்.

இதற்குப் பதில், தென் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் இருந்து சென்னை அல்லது பெங்களூருக்கு சரக்குகளை கொண்டு செல்ல மாற்று வழிகளை அதிமுக கொண்டு வரும். மேலும், தூத்துக்குடி துறைமுகம் சரக்கு மாற்று துறைமுகமாக மேம்படுத்தப்படும்.

- இன்னும் 5 ஆண்டுகளில் மின் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். காற்று, சூரிய சக்தி மற்றும் பிற மரபு சாரா மின் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

- ஒளிவு மறைவற்ற, குடிமக்களின் உணர்வுகளை மதிக்கக் கூடிய, நேர்மையான, மதச் சார்பற்ற, ஆற்றல் மிக்க நிர்வாகத்தை இந்திய மக்களுக்குத் தர அதிமுக உறுதி அளிக்கிறது.

- ஏழைகளுக்கு சேவை செய்கிறோம் என்ற போர்வையில் துளிகூட அச்சம் இன்றி தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மீது, குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் இந்த அமைப்புகளின் மீது அதிமுக மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

- தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் புனரமைக்கப்பட்டு தேசிய ஊரக மேம்பாட்டுத் திட்டம் என மாற்றப்படும். இத்திட்டத்தின் கீழ் 75 சதவீதம் பொருளாகவும், 25 சதவீதம் பணமாகவும் வழங்கப்படும்.

- ஊரக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 5 நாட்கள் பணிபுரிவோருக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான 25 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ பருப்பு வகைகள், 1 கிலோ சமையல் எண்ணெய், 5 லிட்டர் மண்ணெண்ணெய் கொண்ட தொகுப்பு வழங்கப்படும்.

- வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்களின் பசியை போக்கும் வகையில், தினந்தோறும் அவர்களுக்கு உணவு அளிக்கும் வகையில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அன்னதானத் திட்டம் நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரம் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்படும். இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும்.

- சட்டத்தை தவறுதலாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், ஏராளமான பாதுகாப்புகள் அடங்கிய கடுமையான தீவிரவாத எதிர்ப்புச் சட்டம் இயற்றப்படும்.

- இந்தியாவில் தங்கியிருப்பதற்கான காலக்கெடு முடிந்த பிறகும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டினர் குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்கள் கெளரவமாக வெளியேற்றப்படுவார்கள்.

ராமர் கோவில்...

நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நீடித்து வரும் ராமர் கோயில் பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண முனையும். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைய நேரிட்டால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இறுதி முடிவாக ஏற்றுக் கொண்டு அதன்படி இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X