சென்னைக்கு சிறப்பு கவனிப்பு.. முதல்வர் விஜய் அமைச்சரவையில் 5 பேர் இங்க தான்! காரணம் இதுதான்!
சென்னை: விஜய் நாளை முதலமைச்சராகப் பதவியேற்கும் நிலையில், அவருடன் மேலும் 8 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக அமைச்சரவையில் சென்னையைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக தவெகவின் எண்ணிக்கை 107 ஆக குறையும். ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் எண்ணிக்கை தேவை எனும் நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவைக் கேட்டு விஜய் கடிதம் எழுதி இருந்தார்.

முதல் கட்சியாக காங்கிரஸ் தனது ஆதரவை அறிவித்தது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளதால், தவெக தலைமையிலான கூட்டணியின் பலம் 112 ஆக அதிகரித்தது. இந்நிலையில், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் நேற்று தங்கள் ஆதரவை அறிவித்தன. அந்த இரு கட்சிகளுக்கும் தலா 2 எம்எல்ஏக்கள் உள்ளதால், பலம் 116 ஆக உயர்ந்தது.
இதன் தொடர்ச்சியாக, இன்று மாலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தங்கள் ஆதரவை அறிவித்தன. இவ்விரு கட்சிகளுக்கும் தலா 2 எம்எல்ஏக்கள் இருப்பதால் பலம் 120 ஆக அதிகரித்தது. இதன் காரணமாக தவெக பெரும்பான்மை பலத்தை பெற்றது.
நாளை பதவியேற்கும் விஜய்
இதையடுத்து, ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்த விஜய், பெரும்பான்மை பலம் இருப்பதற்கான கடிதங்களை நேரில் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். விஜய்க்கு பெரும்பான்மை பலம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட ஆளுநர், அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து நாளை காலை 10 மணியளவில் விஜய் பதவியேற்பது உறுதியானது. சென்னை நேரு விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் விஜய் உடன் அமைச்சர்கள் 9 பேரும் பதவியேற்கின்றனர். புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் நாளை முதற்கட்டமாக அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தவெக அமைச்சரவையில் இடம் பெறுவோர் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
தவெக அமைச்சரவை உத்தேச பட்டியல்
ஜோசப் விஜய்: பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை
கே.ஏ.செங்கோட்டையன்: பொதுப்பணித்துறை
என்.ஆனந்த்: நகராட்சி நிர்வாகத்துறை
சிடிஆர் நிர்மல்குமார்: மின்சாரத்துறை
வெங்கட் ரமணன்: பள்ளி கல்வித்துறை
ஆதவ் அர்ஜுனா: விளையாட்டு மற்றும் மது விலக்குதுறை
ராஜ்மோகன்: ஆதி திராவிடர் நலத்துறை
முஸ்தபா: சிறுபான்மையினர் நலத்துறை
அருண் ராஜ்: பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை
சென்னையில் 5 பேர்
நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகும் 9 பேரில் 5 பேர் தலைநகர் சென்னையில் எம்.எல்.ஏவாக இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற சி. ஜோசப் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
தி.நகர் தொகுதியில் வென்ற புஸ்ஸி என்.ஆனந்த், மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற வெங்கட்ரமணன், வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற ஆதவ் அர்ஜுனா, எழும்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற ராஜ்மோகன் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதாகத் தெரிகிறது.
திராவிடக் கோட்டையைத் தகர்த்த வெற்றி
சென்னை, கடந்த கால தேர்தல்களில் எப்போதும் திராவிடக் கட்சிகளின், குறிப்பாக திமுகவின் கோட்டை எனச் சொல்லப்படுவது உண்டு. ஆனால், சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் 14-ஐ கைப்பற்றியது தவெக. கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்தார் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு. இந்நிலையில் தான் மாபெரும் வெற்றிக்குக் காரணமானவர்களுக்குப் பரிசளிக்கும் விதமாக சென்னையின் 5 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக உள்ளனர். அடுத்தகட்ட பதவியேற்பில் மேலும் சிலருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.
உடனடி அணுகல்
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் ஒரு கட்சிக்கு, நிர்வாகத்தின் மையப்புள்ளியான சென்னையில் வலுவான பிடி இருப்பது அவசியம். தலைமைச் செயலகத்திற்கு மிக அருகிலேயே அமைச்சர்கள் இருப்பது, ஆரம்பக்கட்ட நிர்வாகச் சிக்கல்களை விரைந்து களைய உதவும் என விஜய் கருதுகிறார். கோப்புகளைக் கையாள்வது முதல் அவசர ஆலோசனைகள் வரை அனைத்திற்கும் சென்னை எம்.எல்.ஏக்களே வசதியாக இருப்பார்கள் என்பதாலும், சென்னைக்கு கேபினட்டில் அதிக இடம் வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய புள்ளிகள்
முக்கியமான விஷயமாக, தவெகவின் முக்கிய புள்ளிகள் பலரும் சென்னையில் நின்று வெற்றி பெற்றுள்ளனர். முக்கிய புள்ளிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் சென்னைக்கு கேபினட்டில் கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளது.
திமுக, அதிமுக ஆட்சிகளில்
கடந்த திமுக ஆட்சியில் தலைநகர் சென்னையில், முதலமைச்சர் ஸ்டாலினையும் சேர்த்து அமைச்சரவையில் 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் கேபினட்டில் இடம்பெற்றிருந்தனர். மற்ற பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் இடம்பெற்றிருந்தார்.
அதற்கு முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், வளர்மதி ஆகிய இருவர் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications