நான் சொல்லியதை செய்து முடிப்பேன்: ஜெ. சபதம்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha with Leaders
சென்னை: எனக்கு தன்னலம் கிடையாது, உங்களை விட்டால் எனக்கு யாரும் இல்லை. உங்களை நம்பித்தான் இருக்கிறேன். நான், சொல்லியதை செய்து முடிப்பவள். தமிழக மக்கள் வளமாக வாழ நான் போராடுவேன். சாதித்தே தீருவேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் சென்னை தீவுத் திடலில் நடந்தது.

நாடாளுமன்றம் போல அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் நடந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா, சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், சிபிஐ பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தேசிய செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட, அதை பிரகாஷ் காரத், ஏ.பி. பரதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

கூட்டத்தில் ஜெயலலிதா எழுதி வைத்துக் கொண்டு பேசியதாவது:

கடந்த 2004ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், உங்கள் வாக்குகளைப் பெற்று, மத்தியில் காங்கிரஸ் தலைமையில், திமுக அங்கம் வகித்த கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில், இந்த மத்திய அரசு உங்களுக்கு என்ன நன்மை செய்தது? காங்கிரசும், திமுகவும் இணைந்த மத்திய அரசால் நீங்கள் அடைந்த பயன் என்ன?

பொருளாதார சீரழிவு, அதிகரித்து வரும் தீவிரவாதம், விவசாயிகள் தற்கொலை, நதிநீர்ப் பங்கீட்டில் பாரபட்சம், வேலை இல்லாத் திண்டாட்டம், தொழில் வளர்ச்சி கடும் பாதிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றிற்கு, இன்றைய மத்திய அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியப் போக்கும் தான் காரணம் என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். காங்கிரஸ் கட்சிக்குத் தப்பாது தாளம் போட்டுக் கொண்டு, தமிழ்நாட்டை அழிவுப் பாதையில், திமுக அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இவர்களுக்கு வரும் மே மாதம் 13ம் தேதி அன்று நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை எடுத்துக் கொண்டால், ஈழத் தமிழர்களுக்காக, தான் ஏதோ பெரிய தியாகங்களை செய்ததாக, கருணாநிதி குறிப்பிடுகிறார். ஆனால், 2006-ம் ஆண்டு, கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, என்ன செய்தார் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனது ஆட்சிக் காலத்தில், கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக, நான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். கச்சத் தீவை மீட்க, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

அடுத்த முக்கியமான பிரச்சினை விஷம் போல் ஏறும் விலைவாசி. தமிழகத்தில் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் முடிவதற்குள், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மும்மடங்கு உயர்ந்து, நீங்கள் எல்லாம் வாழ்க்கையே நடத்த முடியாத அளவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, ஆதரியுங்கள் அதிமுக தலைமையிலான கூட்டணியை, என்று உங்களை எல்லாம் இரு கரம் கூப்பி வேண்டி கேட்டுக் கொள்கிறேன். சட்டம்-ஒழுங்கை சீராக்க, வாக்களியுங்கள் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு, என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மின்சார வெட்டு காரணமாக, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, விவசாய உற்பத்தி ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், வேலையில்லாத் திண்டாட்டம், வேலை இழப்பு, ஊதிய இழப்பு ஆகியவை அதிகரித்துக் கொண்டு வருவதோடு மட்டும் அல்லாமல், அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

எனது ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக விளங்கியது. வேறு மாநிலங்களுக்கு, மின்சாரத்தை வழங்கியதன் காரணமாக, அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தது. கருணாநிதியின் நிர்வாகத் திறமையின்மையும், அக்கறையின்மையும், தன்னலமுமே, தற்போதைய கடுமையான மின் பற்றாக்குறைக்குக் காரணம், என்று நான் குற்றம் சாட்டுகிறேன். தரமான மின்சாரம், தங்கு தடையின்றி கிடைக்க, வாக்களியுங்கள் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம், மத்திய அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்திய, தி.மு.க.வினர் மீது, தக்க நடவடிக்கை எடுக்க, அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

குறைந்த கட்டணத்தில், விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்கள் கண்டுகளிக்கவும், கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள், நிம்மதியாக தங்கள் தொழிலை செய்யவும், நான் நிச்சயம் வழிவகை செய்வேன் என்பதை, உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐந்தாண்டு கால, மத்திய காங்கிரஸ் ஆட்சியின், நிர்வாகத் திறமையின்மை காரணமாக, நாட்டின் பொருளாதாரம், மோசமான நிலைக்கு சென்றுள்ளதையும், தீவிரவாதம் அதிகரித்துள்ளதையும், நீங்கள் நன்கு அறிவீர்கள். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை, திமுக தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

எனவே, இந்திய நாட்டின் தற்போதைய பின்தங்கிய நிலைக்கும், பெருகி வரும் தீவிரவாதத்திற்கும், தி.மு.க-விற்கும் பங்கு உண்டு. இதற்கு திமுகவும் பொறுப்பு ஏற்க வேண்டும். ஐந்து ஆண்டு கால மத்திய காங்கிரஸ் ஆட்சியில், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

ஒன்றை செய்வேன் என்று நான் சொன்னால், அதை எப்படியும் செய்து முடிப்பேன் என்பது உங்களுக்கு தெரியும். வீராணம் ஏரியில் இருந்து, தண்ணீரை சென்னைக்குக் கொண்டு வந்து, சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவேன் என்று சொன்னேன். அது முடியாது என்று எதிரிகள் கூறினர். ஆனால், அதை எப்படியும் செய்து முடிப்பேன் என்று சபதம் மேற்கொண்டேன். சொன்னதை செய்து முடித்தேன்.

காட்டுக் கொள்ளையன், சந்தனக் கடத்தல் வீரப்பனை, பிடித்தே தீருவேன் என்று சபதம் மேற்கொண்டேன். அதையும் செய்து முடித்தேன்.

தமிழ்நாட்டின் உரிமைகளை பெற்றுத் தரவும், தமிழ்நாட்டு மக்களுக்கு, வளமான வாழ்வை பெற்றுத் தரவும், நான் போராடுவேன்; அதை சாதித்தே தீருவேன். தமிழ்நாட்டிற்காக நான் எதையும் செய்வேன். எனக்கு தன்னலம் கிடையாது. சுயநலமும் கிடையாது. எனக்கென்று குடும்பமும் கிடையாது. குடும்ப நலத்திற்காக தமிழ்நாட்டின் உரிமையை, மத்திய அரசிடம் விட்டுக் கொடுக்க மாட்டேன். தமிழக மக்களின் வாழ்வை, மத்திய அரசின் காலடியில் அடகு வைக்க மாட்டேன்.

அடுத்து அமையப் போகும், புதிய மத்திய அரசிடம், வாதாடி, போராடி, தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், தேவையானவற்றை எல்லாம் பெற்றுத் தருவேன். இதை நிச்சயமாக செய்து முடிப்பேன்.

அதற்காக நீங்கள் எனது கரத்தை வலுப்படுத்த வேண்டும். என்னை நம்பி, என் மீது முழு நம்பிக்கை வைத்து, இந்த தேர்தலில் நீங்கள், எனக்கு முழு ஆதரவை தர வேண்டும். தமிழ்நாட்டிற்கு என்னென்ன தேவையோ, அவற்றையெல்லாம், மத்திய அரசிடம் வாதாடி, போராடி, தமிழ் நாட்டிற்கு பெற்றுத் தந்து காட்டுவேன். இதை நான் செய்து முடிப்பது திண்ணம்.

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தேர்தலில் நீங்கள் அளிக்கும் முடிவைப் பொறுத்து தமிழ் நாட்டிற்கு நீங்கள் ஒரு புதிய வரலாற்றை ஏற்படுத்தும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

புதிய வரலாற்றை எழுதுங்கள் ...

அதிமுக கூட்டணிக்கு நீங்கள் முழு ஆதரவைத் தந்தால் 40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணிக்கு நீங்கள் வெற்றியைத் தந்தால், இந்தியாவிலேயே புதிய வரலாறு எழுதப்படும். தமிழ்நாட்டிற்கு புதிய முக்கியத்துவம் கிடைக்கும். தனி முக்கியத்துவம் கிடைக்கும்.

முழுமையான வெற்றியை இந்த அணிக்கு நீங்கள் தந்துவிட்டால், இனி அடுத்த மத்திய அரசு தமிழ்நாடு எப்படி சொல்கிறதோ அப்படித்தான் அமையும். தமிழ்நாடு யாரை சுட்டிக் காட்டுகிறதோ அவர்கள் தான் அடுத்த பிரதமராக முடியும். இதை நினைவில் வைத்துக்கொண்டு உங்கள் தீர்ப்பைத் தாருங்கள் என்றார் ஜெயலலிதா.

கூட்டத்தின் இறுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரையும் மேடையில் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+