பிரசாரத்தில் ஈழம்-உயர் நீதிமன்றத்தில் டி.ஆர் வழக்கு
சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனையை முன்வைத்து பிரச்சாரம் செய்வதை தடுக்கக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிடக்கோரி லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மெத்தனபோக்கை கண்டித்து பெரியார் திராவிட வழக்கம் வீடு வீடாக சிடி வினியோகித்து வருகிறது. இதைத் தடை செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தது.
இந் நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் இருந்து போட்டியிடும் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் ஈழத்தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் லட்சிய திமுக, இலங்கை பிரச்சனையை கண்டுகொள்ள தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரசாரம் செய்யும்.
நேற்று திருச்சியில் பிரசாரம் செய்த எங்கள் கட்சியின் திருச்சி வேட்பாளர் மன்சூர் அலி கானை ஈழப் பிரச்சனை குறித்து பிரசாரம் செய்ய போலீசார் தடை விதித்துள்ளனர். அவரது பேச்சை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இலங்கை பிரச்சனையை மக்களிடம் கொண்டு செல்லும் உரிமை எங்களுக்கு உள்ளது.
எனவே, தமிழக அரசு மற்றும் போலீசார் இதை தடுக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
இதன் விசாரணை நாளை நீதிபதி சுகுணா முன்னிலையி்ல விசாரணைக்கு வருகிறது.
நீதிமன்றத்திற்கு வெளியே டி.ராஜேந்தர் நிருபர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் நடப்பது போல் உலகத்தில் வேறு எங்கும் இனப் படுகொலை நடக்கவில்லை. இதை தடுப்பதற்காக தான் நாங்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளோம்.
முன்பு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட படத்தை காட்டி ஒப்பாரி வைத்து ஓட்டு வாங்கினார்கள். அப்போது தேர்தல் கமிஷன் எங்கே போனது? தமிழனுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா?
அவரை (முதல்வர் கருணாநிதி) தமிழின தலைவர் என சொன்னதற்காக வெட்கப்படுகிறேன்...
ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் மட்டும் தான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என தமிழக அரசு நினைக்கிறதா?. விடுதலை புலிகளைப் பற்றி கருத்து சொன்ன கருணாநிதி அந்தர் பல்டி அடித்துள்ளார்.
முன்பு அவரை தமிழன தலைவர் என சொல்லி அவருக்காக பிரசாரம் செய்து இருக்கிறேன். அதற்கு இப்போது வெட்கப்படுகிறேன். மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றார் டி.ராஜேந்தர்.
இயக்குனர் மணிவண்ணன் பேச்சுக்கு தடை...
இந்நிலையில் இயக்குனர் மணிவண்ணன் ஈழ பிரச்சினையை முன் வைத்து பேசவிருந்த பொதுகூட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர். இந்தத் தடையை நீக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுகுணா தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். வழக்கை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications