விடுதலைப் புலிகள் போர் நிறுத்த அறிவிப்பு - இலங்கை நிராகரிப்பு
வன்னி: ஐ.நா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். ஆனால் அதை இலங்கை அரசு நிராகரித்து விட்டது.
இது தொடர்பாக இன்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலத்தினை தடுத்து நிறுத்தவும், இந்த பேரவலத்தினை தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுக்கும் வேண்டுதல்களை ஏற்றும் இன்று முதல் விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துகின்றனர்.
இதனடிப்படையில் அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளையும் காலவரையறையற்ற முறையில் இடைநிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளோம்.
இலங்கை ராணுவத்தினர் வன்னியில் தொடர்ந்து நடத்திவரும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணான போர் நடவடிக்கைகளினால் எமது மக்கள் அனுபவிக்கும் துன்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த பல மாதங்களாக திட்டமிட்ட முறையில் இலங்கை அரசினால் இம் மக்களுக்கான உணவு, மருந்து மற்றும் பிற மனிதாபிமான வழங்கல்கள் இடைநிறுத்தப்பட்டமையால் பட்டினி அபாயம் ஏற்பட்டுள்ளது.
மறுபுறம், இப்பகுதிகளில் இருந்து பல வழிகளிலும் வெளியேறிய போது சிங்களப் படைகளிடம் அகப்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் அனைத்துலக விதிகளுக்கு முரணாக தடுப்பு முகாம்களிலும், ராணுவ வதைமுகாம்களிலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இம்மக்கள் அனைத்துலக விதிகளுக்குட்பட்ட பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள் தரப்படாமல் துன்புறுத்தப்படுகின்றனர். அவர்கள் சொந்த இடங்களுக்கு சென்று குடியமர்வதற்கு இலங்கைப் படையினர் அனுமதிக்காமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளபடியால் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
மேலும், இந்த மக்களில் ஒரு பகுதியினரை மனிதக் கேடயங்களாக நடத்தும் முயற்சிகளையும் இலங்கை ராணுவம் மேற்கொண்டுள்ளது.
இந்தப் பின்னணியில், ஐ.நா. இப்பகுதிகளுக்கு மனிதாபிமான வழங்கல் வழிகளை ஏற்படுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகளை நாங்கள் வரவேற்பதுடன் இம்முயற்சிகளுக்கான ஒத்துழைப்புக்களை முழுமையாக வழங்கிட தயாராகவுள்ளோம்.
மேலும் ஜி-8 நாடுகளின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை, வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை, இந்திய அமைச்சர்கள் வெளியிட்ட அறிக்கைகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பு ஆகியவற்றையும் நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்.
இன்று ஏற்பட்டுள்ள வன்னி பேரவலங்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து மக்களின் இழப்புக்களை நிறுத்தி, மனிதாபிமான வழங்கல்களை விநியோகிப்பதனை உறுதிப்படுத்துவதற்கு போர் நிறுத்தப்பட்ட சூழல் அவசியமானது என்கின்ற அனைத்துலக சமூக வேண்டுதல்கள் மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
இதற்கான முதல் முக்கியபடியாக நாங்கள் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறிவிப்பினை விடுக்கின்றோம்.
இலங்கை அரசும் இத்தகையதொரு போர்நிறுத்த ஏற்பாட்டிற்கு உடன்படுமாறு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை நிராகரிப்பு..
ஆனால் விடுதலைப் புலிகள் முதலில் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும். அதுவரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications