சங்கரராமன் கொலை-விசாரணை ஒத்திவைப்பு
புதுச்சேரி: காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் வழக்கு விசாரணையை புதுச்சேரி நீதிமன்றம் ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவர் கடந்த 2004, செப்டம்பர் 3ம் தேதி அன்று கோயிலில் வைத்து மர்ம கும்பலால் வெட்டிப் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, விஜேந்திர சரஸ்வதி உள்பட 24 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 3ம் தேதி அன்று நடந்த விசாரணையின் போது சங்கரராமன் மனைவி பத்மா, மகள் உமா, மகன் ஆனந்த் சர்மா ஆகியோர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சாட்சி அளித்தனர்.
அப்போது, கொலையாளிகளை பார்த்ததாக வாக்குமூலம் அளித்திருந்த இரண்டு சாட்சிகள் திடீரென்று பல்டி அடித்தனர். இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ், அவர்களில் ஒருவரான குமாரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் நீதிபதி கிருஷ்ண ராஜா முன்னிலையில் புதுச்சேரி நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்டி அடித்த துரைக்கண்ணு என்னும் மற்றொரு சாட்சியிடம் விசாரணை நடக்க இருந்தது.
ஆனால், குற்றம் சாட்டப்பட்ட 24 பேர்களில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, விஜேந்திர சரஸ்வதி உள்பட 13 பேர் இன்று நீதிமன்றத்துக்கு வரவில்லை.
இதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications