என்னைத் தோற்கடிக்க ரூ. 50 கோடியில் திமுக திட்டம் - வைகோ
விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் என்னைத் தோற்கடிக்க ரூ. 50 கோடியை செலவழிக்க திமுக திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயாளர் வைகோ.
விருதுநகர் தொகுதிக்குட்ப்ட அருப்புக்கோட்டை யூனியன் பகுதிகளில் வைகோ பிரசாரம் மேற்கொண்டார்.
பெரிய வள்ளிக்குளத்தில் தொடங்கி அவர் இரவு வரை பிரசாரம் மேற்கொண்டார்.
அவர் பேசுகையில், நான் இந்த தொகுதியில் போட்டியிடுவதால் பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற வேண்டும் என நினைக்கின்றனர்.
வைகோவை தோற்கடிக்க வேண்டும் என்பது மேலிடத்து உத்தரவு என கேள்விப்படுகிறேன். இந்த தொகுதியில் ரூ.50 கோடி செலவிட திட்டமிட்டுள்ளார்கள்.
திருமங்கலம் இடைத்தேர்தலுக்குப் பின் தேர்தல் நடைமுறையே மாறி விட்டது. பணத்தை கொடுத்து ஓட்டுக்களை வாங்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.
ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட பிரச்சினைகள், தங்கள் குழந்தைகளுக்கு பள்ளி திறக்கும் நேரத்தில் நோட்டுப்புத்தகம் வாங்க வேண்டிய செலவுகள் என இருக்கும்போது இவ்வாறு ஓட்டுக்கு பணம் கொடுத்து கடவுள் மேல் சத்தியம் வாங்கிக் கொள்ளுகிறார்கள். கடவுளுக்கு பயந்து அவர்களும் ஓட்டுப் போடுகிறார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவது என்பது அதைவிட பாவச் செயலாகும்.
நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். தேர்தல் முடிவுக்குப்பின் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடத்தில் ஜெயலலிதா இருப்பார் என்பது உறுதி என்றார் வைகோ.


Click it and Unblock the Notifications
