அதி்முக, தேமுதிக மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு
நெல்லை: நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக மற்றும் தேமுதிக பிரமுகர்கள் மீது போலீசார் தேர்தல் விதிமுறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதை கடுமையாக கடைப்பிடிப்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது. ஆனால், சில இடங்களில் அரசியல் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறி வருகின்றனர்.
இந்நிலையி்ல் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சின்னகோவிலான் குளத்திலுள்ள அரசு குடிநீர்த் தேக்க தொட்டியில் அதிமுக கிளை செயலாளர் முத்து பாண்டியன் தேர்தல் சுவரெட்டிகளை ஒட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் அவர் மீது தேர்தல் விதி மீறல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதே போல் கீழக்கடையம் பேரூந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகம் வாக்குச்சாவடிக்கு மிக அருகிலேயே இருப்பதால் அதனை மாற்றிட வருவாய் துறையினர் அதிமுகவினரிடம் கூறினார். ஆனால் அவர்கள் அதை மாற்ற மறுத்துவிட்டனர். அவர்கள் மீது கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தெற்கு பன்னம்பாறையை சேர்ந்த நயினார் என்பவரது வீட்டில் அனுமதி பெறாமல் விளம்பரம் செய்த தேமுதிக ஒன்றிய செயலாளர் ஸ்டீபன், மரியதாஸ், பரமசிவன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் கொம்மடிக் கோட்டை அரசு பேரூந்து நிலையத்தில் விளம்பரம் செய்த அதிமுக மாவட்ட விவசாய பிரிவு இணை செயலாளர் காசியானந்தன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications