சென்னையில் 4 பெண்கள் கடத்தல்-ரூ. 20 லட்சம் கேட்டு மிரட்டல்
சென்னை:சென்னையில் நான்கு வடநாட்டு பெண்களை கடத்தி சென்ற மர்ம கும்பல் ஒன்று ரூ. 20 லட்சம் கேட்டு மிரட்டியது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக அந்த பெண்களை நடுவழியில் விட்டுவிட்டு, அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
சென்னை அண்ணாநகரில் இரண்டாவது தெருவில் உள்ள டபிள்யூ பிளாக்கில் தேஜ் கரண்சிங் என்பவர் வசித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கோடை விடுமுறைக்காக அவரது வீட்டுக்கு டெல்லியிலிருந்து உறவினர்கள் சிலர் வந்திருந்தனர்.
நேற்று முன்தினம் அவர்களில் தன்பாலால் மனைவி தானேஷ் (27), மோகன் லால் சர்மாவின் இரண்டு பெண்கள் கல்பனா சர்மா (22), அனுசர்மா (20) ஆகிய மூவரும் தேஜ் கரண்சிங் மனைவி அனிதாவுடன் சென்னையை சுற்றி பார்க்க சென்றனர். பி்ன்னர் அவர்கள் இரவு உணவுக்காக வடபழனியில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றனர்.
சாப்பிட்டு முடித்து நான்கு பேரும் தங்களது மாருதி ஜென் காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்களது கார் வடபழனி 100 அடி சாலையில் வந்த போது மர்ம கும்பல் ஒன்று காருக்கு குறுக்கே வந்து வழிமறித்தது. இதையடுத்து கார் நிறுத்தப்பட்டது.
அப்போது அந்த மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வண்டியை ஓட்டி வந்த பெண்ணின் கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளது. இதை தொடர்ந்து அந்த கும்பல் காருக்குள் ஏறிக்கொண்டது. சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
பின்னர் அந்த கும்பல் அந்த 4 பெண்களையும் காரோடு கடத்தி சென்றது. இந்நிலையில் டெல்லியில் இருக்கும் மோகன்லால் சர்மாவுக்கு, அந்த கும்பலை சேர்ந்த ஒருவன் போன் செய்துள்ளான்.
அதில், உனது பெண்கள் இருவரையும் கடத்தி கொண்டு வைத்துள்ளோம். அவர்களோடு உன் உறவுக்கார பெண்கள் இருவரும் இருக்கிறார்கள். அவர்களை பத்திரமாக விடுவிக்க வேண்டும் என்றால் உடனடியாக ரூ. 20 லட்சம் வேண்டும் என கூறிவிட்டு அந்த மர்ம கும்பலை சேர்ந்தவன் போன் இணைப்பை துண்டித்துவிட்டான்.
இதையடுத்து மோகன்லால் விவரத்தை கரண் சிங்கிடம் சொல்ல, அவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் புகார் செய்தார். இதையடுத்து அவர் 10 தனி படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் மோகன்லால் சர்மாவுக்கு மிரட்டல் வந்த தொலைபேசி எண்களை கண்டுபிடித்து அதிலிருந்து விசாரணையை துவக்கினர். அதே நேரத்தில் கடத்தப்பட்ட காரின் நம்பரை கொடுத்து சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக அந்த மர்ம கும்பல் அந்த பெண்களை திண்டிவனம் அருகே காரில் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். பின்னர் அந்த பெண்கள் கரண் சிங்கிற்கு போன் செய்து தகவலை தெரிவித்தனர். அந்த பெண்களை திண்டிவனத்தில் இருந்து பத்திரமாக மீட்டு கொண்டுவர போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
ரூ. 20 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் திடீரென்று பெண்களை நடுவழியில் இறக்கிவிட்டது ஏன் என தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications