திருச்சியில் மன்சூர் அலிகானின் அலுவலகம் சூறை - உதவியாளருக்கு குத்து
திருச்சி: திருச்சியில் லட்சிய திமுக சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானின் அலுவலகம் மர்ம கும்பலால் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டது. மன்சூர் அலிகானின் உதவியாளருக்கு சோடா பாட்டில் குத்து விழுந்தது.
திருச்சி மெக்டனால்ட்ஸ் ரோட்டில் அரை குறையாக கட்டப்பட்ட கட்டடம் ஒன்று கொட்டகை போட்டு தேர்தல் அலுவலகத்தை அமைத்துள்ளார் மன்சூர் அலிகான்.
நேற்று மாலை தேர்தல் பிரசாரத்திற்காக போய் விட்டார். அலுவலகத்தில் அவரது உதவியாளர் விஸ்வம் மற்றும் கட்சியினர் சிலர் இருந்தனர்.
மாலை 4 மணி அளவில் சுமார் 50 பேர் கொண்ட கும்பல் கையில் சவுக்குகட்டை, கடப்பாரை, மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்தது. அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த டியூப் லைட்டுகள், நாற்காலிகள் போன்றவற்றை அடித்து நொறுக்கினார்கள்.
லட்சிய தி.மு.க தலைவர் விஜய டி.ராஜேந்தர், மன்சூர்அலிகான் கட் அவுட்களை கீழே தள்ளி கிழித்தனர்.
இதையடுத்து அக்கும்பலின் செயலைத் தடுக்க விஸ்வம் முயன்றார். அப்போது அவரை சோடா பாட்டிலை உடைத்து குத்தினர். மன்சூரின் அண்ணன் முகம்மது மற்றும் சபீக், விஜி ஆகியோரையும் தாக்கினார்கள். அலுவலகத்தின் பின் பகுதியில் புதிதாக கட்டப்படும் மதில் சுவரின் கற்களையும் இடித்து தள்ளிவிட்டு தப்பினர்.
குத்துப்பட்ட விஸ்வ அதிக ரத்தப் போக்கால் மயக்கமடைந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். காயமடைந்த மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் மன்சூர் அலிகான் விரைந்து வந்தார். போலீஸாரிடம், இது எனது வெற்றியை தடுக்க நடந்த அரசியல் சதி. எனது உதவியாளர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். எனக்கும் இதே கதிதான் ஏற்படும் என மிரட்டி விட்டு சென்றிருக்கிறார்கள். இந்த சதி செயலில் ஈடுபட்ட ரவுடிகள் மீது உடனே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கண்டோன்மெண்ட் போலீசார் அவரிடம் புகார் மனு பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாக்குதல் நடந்த இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான சவுண்டையா நேரில் வந்து பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications