காங்.க்கு ஆதரவு: மாயாவதி-முலாயம் போட்டி
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்க பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவும் முன் வந்துள்ளனர்.
ஆனால், இருவரின் ஆதரவையும் ஏற்க காங்கிரஸ் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
மாயாவதியின் அரசியல் ஆலோசகரான எஸ்.சி.மிஸ்ரா இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
அதே போல பிரதமரை நேற்று முன் தினம் சந்தித்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவும், பொதுச் செயலாளர் அமர் சிங்கும் நிபந்தனையில்லாத ஆதரவு தரத் தயார் என்றும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளுமாறும் கோரினர்.
ஆனால், அதையும் காங்கிரஸ் ஏற்கவில்லை. இதையடுத்து கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, காங்கிரசுக்கு பிரச்சனை அடிப்படையில் ஆதரவு தருவோம் என்று சமாஜ்வாடி கட்சி இன்று காலை அறிக்கை வெளியிட்டது.
இதன் பிறகும் காங்கிரஸ் இறங்கி வராததால், எதிர்க் கட்சி வரிசையில் அமரப் போவதாக அறிவித்துள்ளது.
காங்கிரசுக்கு ஆதரவு தருவது அதன் மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது என்பதே சமாஜ்வாடி, மாயாவதியின் திட்டம்.
ஆனால், உத்தரப் பிரதேசத்தில் தனித்து நின்றே மாயாவதி, முலாயமுக்கு இணையாக 20 இடங்களில் வென்றுள்ள காங்கிரஸ் இந்த இருவருடனும் கூட்டணி அமைக்கத் தயாராக இல்லை.
இதனால் தான் அவர்கள் ஆதரவு தர முன் வந்தாலும் அதை ஏற்க காங்கிரஸ் மறுத்துள்ளது.
அடுத்த பிரதமர் நான் தான் என்று சொன்ன மாயாவதியின் நிலைமை இப்படியாகிவிட்டது. அதே போல தேர்தலுக்கு முன் கூட்டணியில் சேர முன் வந்த காங்கிரசுக்கு 10 இடம் மட்டுமே தருவோம் என்று சொல்லி கேவலப்படுத்திய முலாயமின் கதையும் இப்படி கேவலமாகிவிட்டது.












Click it and Unblock the Notifications