உலகம் முழுதும் ஈழ தமிழர்கள் துயர நாள் கடைப்பிடிப்பு
ஈழத் தமிழர்கள் பெருமளவில் வாழும் சுவிட்சர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், ஸ்வீடன், நெதர்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் இந்த துக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தில்...
சூரிச் நகரி்ல் உள்ள ஹெல்விட்டியா பகுதியில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணி முதல் மாலை 6 மணி வரை இது நடைபெற்றது.
5000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இதில் கலந்து கொண்டனர். பூக்களையும், மெழுகுவர்த்திகளையும் ஏந்தி வந்து இந்த நிகழ்ச்சியி்ல் பங்கேற்றனர்.
தாயகத்தில் மரணித்த தங்களது சக மக்களுக்காக அஞ்சலி செலுத்தினர்.
சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பேரவையின் இணைப்பாளர் கிருஷ்ணா அம்பலவாணர் தலைமை தாங்கினார்.
பேரவையின் ஆலோசகர் வன்னித்தம்பி தங்கரத்தினம் தியாகச் சுடர் ஏற்றினார். நுதாயினி தர்மலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
டென்மார்க்கில்...
டென்மார்க் தலைநகரில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு துக்க தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
7000க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
டென்மார்க் நாட்டு மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த இருவர் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்த தமது கருத்துக்களை டென்மார்க் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தினர்.
தமிழர் அமைப்புக்களாலும் தமிழ் மாணவர் அமைப்புக்களாலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த போராட்டமானது டென்மார்க்கில் நடைபெற்ற முதலாவது நிகழ்வாகவும் அமைந்திருந்தது.
நிகழ்வில் தமிழ் மாணவர்கள் சமகால வன்னித் தமிழர்களின் அவல வாழ்க்கையை சித்தரித்துக்காட்டும் நிகழ்ச்சியினை இசை வடிவில் வழங்கினர்.
நெதர்லாந்தில்...
நெதர்லாந்து நாடாளுமன்றம் முன்பாக தமிழ் மக்களால் வெள்ளிக்கிழமை துயர நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கறுப்பு உடை அணிந்தும், கறுப்புக் கொடிகளுடனும் மெழுகுவர்திகளுடனும் பூக்களுடனும் தமிழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
படுகொலை செய்யப்பட்ட மக்களின் சில காட்சிப்படங்கள் வைக்கப்பட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டும் மலர் வணக்கமும் செய்யப்பட்டது.
ராஜபக்சேவின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து செருப்புகளால் அடித்து மக்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
காயப்பட்ட பொதுமக்களை ங்கள இராணுவம் கொடுமைப்படுத்தும் காட்சியும் அங்கு செய்து காண்பிக்கப்பட்டது.
ஸ்வீடனில்...
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், மக்கள் கூடும் இடமான செகல்தொர்ய் எனும் இடத்தில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
நூற்றுக்கணக்கான மக்கள் சோகத்துடன் மெழுகுவர்த்திகளை கைகளில் ஏந்தி படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், அவர்களின் கனவை நனவாக்க உழைப்போம் எனும் உறுதியுடனும் தமது வணக்கத்தை செலுத்தினர்.
ஸ்வீடனில் இயங்கும் குர்திஸ்தான் அமைப்பினரும் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியத்தில்...
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஜரோப்பிய நாடாளுமன்றம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன், அங்குள்ள தமிழ் மக்களால் கறுப்பு நாளாகவும் கடைப்பிடிக்கப்பட்டது.
முற்பகல் 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கறுப்பு உடை அணிந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
நார்வேயி்ல்...
நார்வே நாட்டின் மோல்டே நகரிலும் துயர நாள் அனுஷ்டிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கலந்து கொண்டனர்.













Click it and Unblock the Notifications