ராணுவத்திடம் 9,100 புலிகள் பிடிபட்டனர்-இலங்கை
கொழும்பு: தங்களிடம் 9,100 விடுதலைப் புலிகள் பிடிபட்டுள்ளதாகவும் அவர்களுக்கு மறுவாழ்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
செய்தித்துறை அமைச்சர் மகிந்தா யபா கூறுகையில், எங்களிடம் 9,100 விடுதலைப் புலிகள் பிடிபட்டனர், சரணடைந்தனர். இவர்களில் 7,500 பேரிடம் விசாரணை முடிக்கப்பட்டு மறுவாழ்வு, தொழில் பயிற்சிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர்.
ஆனால் மீதமுள்ள 1,600 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவர்கள் தீவிரமான போர் பயிற்சி பெற்றவர்கள், நேரடியாக மிகத் தீவிரமான போரில் ஈடுபட்டவர்கள் என்று கருதுகிறோம். இவர்களில் போர் குற்றம் புரிந்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு மறுவாழ்வு பயிற்சிகள் தரப்படும்.
இவர்களிடம் விசாரணை முடியும் வரை நாட்டில் அவசர கால நிலை அமலில் இருக்கும். எமர்ஜென்சியை தளர்த்திவிட்டால் இவர்களை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு ராணுவம் முடியாமல் போய்விடும் என்றார்.
அவர்களுக்கு எந்த வகையான மறுவாழ்வு பயிற்சி தரப்படுகிறது, அவர்கள் எத்தனை காலம் அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்படுவார்கள் என்ற கேள்விகளுக்கு யபா பதிலளிக்கவில்லை.
மேலும் பிடிபட்டதாகக் கூறப்படும் 9,100 பேரையும் சர்வதேச மீடியாக்களோ, மனித உரிமை அமைப்புகளோ சந்திக்கவும் அனுமதி தரப்படவில்லை.
இலங்கைக்கு ரஷ்யா ஆதரவு:
இதற்கிடையே ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வதேவுடன் இலங்கை அதிபர் ராஜபக்சே தொலைபேசியில் பேசினார். அப்போது தங்களது நீண்ட கால நட்பு நாடான இலங்கைக்கு ரஷ்யா அனைத்து உதவிகளையும் வழங்கும் என மெட்வதேவ் உறுதியளித்தாக அதிபர் மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஐ.நா. பாதுகாப்பு சபையிலும், பிற ஐ.நா. கூட்டங்களிலும் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை எதிர்த்ததற்காக ரஷ்யாவுக்கு ராஜபத்சே நன்றி தெரிவித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications