ஏகப்பட்ட அமைச்சர்கள்-மக்கள் மீது கூடுதல் சுமை
டெல்லி: மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் அமைச்சர்களின் எண்ணிக்கையால் மக்களின் வரிப்பணம் பெருமளவு, அமைச்சர்களுக்காக செலவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த செலவு அனைத்துமே மக்கள் தலை மீது விழுவதுதான் இதில் கவலைக்குரியதாக உள்ளது.
மாநில கட்சிகளின் முக்கியத்துவம் அதிகரித்ததை அடுத்து மத்தியில் ஒரு கட்சி ஆட்சி என்ற நடைமுறை கிட்டதட்ட சாத்தியமில்லாமல் போய்விட்டது. கடந்த பல தேர்தல்களாக கூட்டணி பலத்தை நம்பியே ஆட்சி நடத்த வேண்டிய அவல நிலைக்கு தேசிய கட்சிகள் ஆளாகியுள்ளன.
இதையடுத்து கூட்டணி கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் கேட்கும் அமைச்சரவை கொடுக்கும் கட்டாயத்துக்கு ஆளும் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகி போனது. இவர்களது பாதுகாப்புக்கு மற்றும் இதர செலவு என அரசின் கையிருப்பு அதிகம் கரைய துவங்கியது.
இதையடுத்து மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் நோக்கத்தில் கடந்த 2003ல் ஒரு சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி மக்களவையில் இருக்கும் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்துக்குள் தான் அமைச்சர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது 543 எம்.பி.க்களை கொண்ட மக்களவையில் அதிகபட்சமாக 81 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெற முடியும்.
கடந்த 2004ல் அமைச்சர்களின் எண்ணிக்கை 75 ஆக இருந்தது.
இந் நிலையில நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூ்டடணி அரசு அமோக வெற்றி பெற்று, பிரதமர் மன்மோகன் சிங் இரண்டாவது முறையாக கடந்த 22ம் தேதி பிரதமராக பதவியேற்று கொண்டார்.
அவருடன் சில அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர். ஆனால், அமைச்சர்களுக்கான பேரம் படியாததை அடுத்து காங்கிரசின் பார்மூலாவை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி திமுக வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக அறிவித்தது.
இதையடுத்து காங்கிரஸ் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தியது. ஒரு வழியாக திமுக 3 கேபினட், 4 இணை அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ள ஒப்பு கொண்டது. இதே போல் மம்தா பானர்ஜியும் காங்கரசுக்கு நெருக்கடி கொடுக்க அவர்களுக்கு 1 கேபினட், 6 இணை அமைச்சர்கள் என 7 அமைச்சர்கள் பதவிகள் கொடுக்கப்பட்டது.
இப்படி கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம் இழுக்க, காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பல மூத்த தலைவர்கள் தங்களுக்கும் கேபினட் பதவி வேண்டும் என கேட்டு மேலிடத்துக்கு தலைவலியை ஏற்படுத்தினர். இதையடுத்து கடந்த முறையை விட தற்போது அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
இம்முறை 4 அதிகமாகி 79 என்ற எண்ணிக்கையை தொட்டுவிட்டது. இது அதிகபட்ச எண்ணிக்கையை விட இரண்டு மட்டும் தான் குறைவு. காங்கிரஸ் அரசின் இந்த முடிவு தற்போது கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள சூழ்நிலையில் இப்படி காங்கிரஸ் அரசு 79 மத்திய அமைச்சர்களுடன் மக்களின் மீது அதிக வரி சுமையை செலுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அரசு கூட்டணி அரசுகளின் பேச்சை கேட்டு ஆடாமல் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு செலவினங்களை இறுக்கி பிடிக்க வேண்டும். அமைச்சர் பதவி கேட்டு அடம்பிடிக்கும் பழக்கத்தை அரசியல் கட்சிகளும் விட்டுவிட்டு நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அமைச்சகர்களின் எண்ணிக்கையை குறைப்பதோடு, தேவையற்ற இலாகாக்களை கண்டறிந்து அவற்றை நீக்கிவிட வேண்டும். உள்நாட்டு விமான போக்குவரத்து, ஹோட்டல்கள் போன்றவற்றை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் சிவில் போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சகம் எதற்கு போன்ற கேள்விகள் காங்கிரஸ் அரசு முன் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் என்ற பதவி தனித்து இருக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இணை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்படுவதற்கு பதிலாக கூட்டணி கட்சிகள் வேண்டுகோளுக்காக உருவாக்கப்படுகிறது.
அமைச்சரவையின் எண்ணிக்கையை முடிந்தவரை வெகுவாக குறைக்க வேண்டும். அமைச்சரவை என்பது மக்களின் மீது அதிக சுமைகள் ஏற்றுவதற்கான உரிமை என கருதுவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications