அழகிரி நாளை மதுரை வருகை- தடபுடல் ஏற்பாடு!
மதுரை: மத்திய அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நாளை மு.க.அழகிரி மதுரை வருகிறார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க திமுகவினர் தயாராகி வருகின்றனர்.
மதுரை திமுகவினரின் செல்லப் பிள்ளையான அழகிரி கேபினட் அமைச்சராக இன்று காலை பதவியேற்றார். இதையடுத்து மதுரை திமுகவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
அமைச்சர் பதவியை ஏற்ற பின்னர் முதல் முறையாக நாளை மதுரைக்கு வருகிறார் அழகிரி. இதையடுத்து அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க தடபுடலான ஏற்பாடுகளை திமுகவினர் செய்துள்ளனர்.
இது குறித்து மதுரை நகர் மாவட்ட தி.மு.க செயலாளர் தளபதி, புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென்மண்டல அமைப்புச் செயலாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான மு.க.அழகிரி, மத்திய அமைச்சராக பொறுப்பேற்று நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு விமானம் மூலம் மதுரை மாநகருக்கு வருகிறார்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மதுரை விமான நிலையத்தில் மதுரை மாநகர், புறநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் எழுச்சி மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாவட்டக்கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழக, ஒன்றிய கழக, வட்டக் கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கழக செயல்வீரர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
இன்று அழகிரி பதவியேற்பதைக் காண அமைச்சர் தமிழரசி தலைமையில் ஏராளமான மதுரை திமுகவினரும் டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications