தமிழர்களுக்காக பாடுபடுவேன்-கர்நாடக காங். எம்எல்ஏ
பெங்களூர்: தமிழ்பாட நூல் புத்தகங்கள் சரியான நேரத்தில் கிடைக்க வழிசெய்வேன். தமிழர்களுக்காக நான் பாடுபடுவேன் என சிவாஜிநகர் எம்எல்ஏ ரோஷன் பெய்க் தெரிவித்துள்ளார்.
சிவாஜிநகர் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பெய்க் பெங்களூர் தமிழ் சங்கத்துக்கு வருகை தந்து, சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே மத்திய தொழிலாளர் நல அமைச்சராக இருக்கிறார். அவருடன் பேசி ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களை கொண்டு வருவேன். கட்டிட தொழிலாளர்கள் நலனுக்காக மத்திய அரசு பல சலுகைகளை அறிவித்து உள்ளது.
சமீபத்தில் மறைந்த பெங்களூர் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் சண்முகசுந்தரத்தின் பெயரை ஸ்ரீசர்க்கிளுக்கு வைக்குமாறு கோரிக்கை மனு ஒன்றை மாநகராட்சி கமிஷனரிடம் கொடுத்து இருக்கிறேன்.
பெங்களூரில் தமிழ்பாட நூல்கள் குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை என்று சிலர் என்னிடம் தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு பாட புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்வேன். அதோடு கல்வி அமைச்சரை சந்தித்து காலியாக உள்ள ஆசிரியர்கள் இடத்தை நிரப்புவதற்கு முயற்சி செய்வேன்.
எனக்கு தமிழ் மக்கள் தான் அதிகம் வாக்களித்துள்ளனர். எனது வெற்றிக்கு அவர்கள் தான் காரணம். நான் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக பாடுபடுவேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications